இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்பு மிகுந்த படங்கள் லிஸ்ட்டில் இடம் பெற்றிருக்கும் படம் விஜய் நடிக்கும் 'பிகில்'. தீபாவளி வெளியீடாக வரும் 'பிகிலு'க்காக விஜய் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஒரு பக்கம் இந்த ஆண்டில் வெளியான அஜித் படங்களான விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை இரண்டுமே வெற்றி பெற்று, அதில் விஸ்வாசம் இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக இருக்க, தங்கள் தளபதி படத்தின் மூலம் அதை முந்த வேண்டுமென காத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். 'பிகில்' ஆடியோ ரிலீஸ் விழாவில் விஜய் பேசியது வழக்கம் போல வைரலாக, விழாவுக்கு வந்த ரசிகர்கள் சிலர் காவல்துறையால் தாக்கப்பட்டது சர்ச்சை ஆனது. இப்படி 'பிகிலை' சுற்றி அனலாக இருக்க படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் முக்கிய பங்காகவும் 'பிகில்' திரைப்படத்தின் கிரியேட்டிவ் ப்ரொட்யூசராகவும் செயல்படும் அர்ச்சனா கல்பாத்தியை சந்தித்தோம். பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம்.
விஜய்யுடன் பழகியிருக்கிறீர்கள்... அவரது இயல்பு எப்படி?
ஆரம்பத்துல எனக்குக் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. நம்ம கரெக்ட்டா ஒர்க் பண்ணனும், ஒரு நல்ல பெயர் எடுக்கணும் என்ற பயம். ஆனா, சார் எங்களை ரொம்ப கம்ஃபர்டபிளா வெச்சிக்கிட்டார். செட்ல என்ன நடக்குதுன்னு எல்லாமே விஜய் சாருக்குத் தெரியும். அந்த அளவுக்கு அக்கறையாகவும் கவனமாகவும் இருப்பார். செட்டில் மட்டுமல்ல, இண்டஸ்ட்ரியில் என்ன நடக்கிறது என்பதையும் முழுக்க தெரிஞ்சு வச்சுருப்பார். ரொம்ப அறிவாளி அவர். மத்தவங்கள எப்படி மதிக்கணும்னு அவர்கிட்ட கத்துக்கிட்டேன். எவ்வளவு உயரத்துக்குப் போனாலும் மத்தவங்களுக்கு மரியாதை தருகிற விதம் ஒன்னு இருக்கு. 'நீ, வா, போ'ன்னுதான் நாம பேசுவோம். ஆனா அவர் எல்லார்கிட்டயும் 'வாங்க போங்க'ன்னு தான் பேசுவார்.
நீங்கள் விஜய் ரசிகர் என்பதால் இந்தப் படத்திற்கு அட்லி கேட்டதை விட நீங்கள் அதிகமாக செய்ததுண்டா?
இல்லை. அவர் கேக்குறதை நாங்க கொடுப்போம். ஏன்னா படத்தின் தரத்தில் அட்லி காம்ப்ரமைஸ் ஆக மாட்டார். படத்துக்கு என்ன வேணுமோ அதை கண்டிப்பா நாங்க பண்ணிடுவோம். இதுதான் எங்க குறிக்கோள்.
'பிகில்' ஆடியோ விழா குறித்தும் போஸ்டர் குறித்தும் விஜய் பேச்சு குறித்துமென அவ்வப்போது சர்ச்சைகள் வந்துகொண்டே இருக்கின்றன. அப்படி எதிர்கொள்கிறீர்கள்?
என்ன நடந்தாலும் நாம போற வழில போகணும். மத்தவங்கள பாதிக்காம இருக்கோமா என்பதுதான் கேள்வி. இந்த மாதிரி விஷயங்கள் என்னை டிஸ்டர்ப் பண்ணாது. சொல்லப்போனா எங்களுக்கு இதை கண்டுகொள்ள நேரம் இல்லை. தீபாவளிக்கு படம் வரணும், நெறய வேலைகள் இருக்கு. இப்போ கூட ரசிகர்கள் டீஸர் கேட்டுட்டே இருக்காங்க. அந்த ஒர்க்தான் போயிட்டு இருக்கு. ஆனா ஒரு விஷயம்... டீஸர் பார்த்து எல்லாரும் மிரண்டுருவாங்க. நான் பிராமிஸ் பண்றேன்.
ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதை ரசித்தீர்களா?
நான் அந்த லான்ச்ல ரொம்ப அலைஞ்சிட்டு இருந்தேன். விழா ஏற்பாடு வேலைகளில் மூழ்கியிருந்தேன். சங்கீதா அக்காதான் என்னை 'ஏன் இப்படி அலைஞ்சுக்கிட்டே இருக்க, இங்க வா... உக்காரு'ன்னு கூப்பிட்டு பக்கத்துல உக்காரவச்சாங்க. கரெக்ட்டா சார் பேசிய போதுதான் உக்காந்தேன். அவர் ரொம்ப ஜாலியா பேசினார், எனர்ஜி நல்லா இருந்தது. வெளியில் பல விதமா சொல்றாங்க, ஆனா படம் குறித்துதான் பேசினார். படத்தை பார்க்கும் போது, அவர் பேசியதன் அர்த்தம் உங்களுக்கு புரியும். அவர் சர்ச்சைக்காக, விளம்பரத்துக்காக பேசுறார்னு எல்லாம் சொல்றாங்க. அப்படி பேசித்தான் இந்தப் படம் ஓடணும்னு அவசியமில்லை. படம், மிக சிறப்பாக வந்துருக்கு.
ரசிகர்களை உள்ளே அனுமதிக்க முடியாமப் போன பிரச்னை குறித்து..?
ஒரு ஆடியோ லான்ச் என்பது ஃபேமிலி கேதரிங் மாதிரி. படத்துல வேலை செஞ்ச எல்லாரையும் அழைத்து ரசிகர்களோடு கொண்டாடும் ஒரு நிகழ்ச்சி. அங்க படத்தில் பணியாற்றிய அனைவரையும் வர வச்சோம். நயன்தாராவால வர முடியல, வேற ஒரு படத்து ஷூட்டிங் போயிருந்தாங்க. அப்படி இரு நிகழ்ச்சியில் ரசிகர்கள் அடி வாங்குனதை எங்களால தாங்கிக்க முடியல. வெளியில் 10,000 பேர் கூடியிருந்தாங்க. உள்ளே 6000 பேருக்கு மேல் இருந்தாங்க. படத்தில் பணியாற்றியவர்களுக்கு, விநியோக உரிமை பெற்றவர்களுக்கு எல்லாம் கீழ, மேடைக்கு முன் டிக்கெட் கொடுத்தோம். கேலரியில் ரசிகர்களுக்குக் கொடுத்தோம். மிகச் சிறந்த ஈவண்ட் மேனேஜ்மண்ட் நிறுவனத்திடம்தான் பொறுப்பை ஒப்படைத்தோம். இவ்வளவு செய்தும் அப்படி ஒரு சம்பவம் நடந்தது பெரிய மனவருத்தம். சிலர் காசு கொடுத்து டிக்கெட் வாங்கினதா கேள்விப்பட்டேன். நாங்க டிக்கெட் எல்லாமே இலவசமாகத்தான் கொடுத்தோம். எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் ஆடியோ லான்ச் டிக்கெட்டை விற்க மாட்டாங்க. தயவு செய்து காசு கொடுத்து வாங்காதீங்க. சிலர் நாங்க கொடுத்த டிக்கட்டை டூப்ளிகேட்டா தயார் செய்து வித்துருக்காங்க. அதை ஒரு அளவுக்கு மேல் தடுக்க முடியல. அதனால் போலீஸ் அந்த நடவடிக்கை எடுத்துருக்கு. விஜய் சார் ரசிகர்கள் அடி வாங்கியது, எனக்குப் பெரிய மனவருத்தம். நாங்க ஏதாவது தவறு செஞ்சிருந்தா மன்னிப்பு கேட்கிறோம். ரசிகர்கள் அடி வாங்குறது, இப்படி கஷ்டப்பட்டது எங்களோட நோக்கம் இல்லை, அப்படி நடக்குமென்று நாங்க நினைக்கவில்லை.