கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களாக திரைப்படத் துறை முடங்கியுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகளுக்கும், சின்னத்திரையில் உள்ளரங்கு ஷூட்டிங்கிற்கும் அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு. அதுபோல கேரள மற்றும் தெலங்கானா அரசும் அந்த மாநிலங்களில் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு கீழ் அனுமதி வழங்கியுள்ளது.
இதனிடையே கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் இதனால் ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் போன்ற பொழுதுபோக்கு இடங்கள் பல நாடுகளில் மூடப்பட்டுள்ளன. கரோனா பாதிப்பு குறைந்து, நாட்டின் நிலை சீராகும் வரை இதுபோன்ற பொழுதுபோக்கு இடங்கள் திறக்கப்படாது என்பதால் இந்தியாவில் நேரடி ஓ.டி.டி. ரிலீஸ் செய்து வருகின்றனர் பல தயாரிப்பாளர்கள். இதற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அந்த வகையில் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த சில படங்களை நேரடி ஓ.டி.டி. ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அதற்குத் தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளர்களே பல திரையரங்குகள் வைத்திருப்பதால் முதலில் திரையரங்கில் படங்கள் ரிலீஸான பின்னரே ஓ.டி.டி.யில் படங்கள் ரிலீஸ் செய்யப்படும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் பாபு தெரிவித்துள்ளார்.