சமீபமாக தெலுங்கு திரைப்பட உலகில் தமிழ் திரைப்பட நடிகர்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதாக அங்கிருக்கும் துணை நடிகர்களிடம் இருந்து குற்றச்சாட்டு எழுந்துகொண்டே இருந்தது. இந்நிலையில் இந்த விஷயம் குறித்து தெலுங்கு நடிகர் சங்கத்தில் இருக்கும் ஒரு குழு , தெலுங்கு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒரு மனு ஒன்றை அளித்துள்ளது.
அதில், “ தெலுங்கு திரைப்பட உலகில் மற்ற மொழி நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் அதிக வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இதனால் தெலுங்கு குணச்சித்திர நடிகர்களும், துணை நடிகர்களும் வாய்ப்புகள் குறைகின்றன. அவர்கள் வருமானம் இன்றி தங்களின் வீட்டு வாடகையை கூட கட்ட முடியாமல் தவிக்கின்றனர்.
ரஜினிகாந்த், விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட தமிழ் நடிகர்களின் படங்கள் தமிழ்நாட்டில் ரிலீஸாகும் நாளிலேயே தெலுங்கிலும் ரிலீஸ் ஆகிறது. அதில் சில படங்கள் தமிழ்நாட்டில் தோல்வி அடைந்தாலும் கூட தெலுங்கில் ஹிட் அடிக்கிறது. தமிழ் படங்கள் ஆந்திராவில் ஓடவேண்டும் என்று ஆந்திர நடிகர்களை அவர்கள் நடிக்க வைப்பதில்லை. ஆனால், தெலுங்கு நடிகர்களோ தங்களின் படங்கள் மற்ற தென்னிந்திய மொழிகளில் வியாபாரம் ஆக வேண்டும் என்பதற்காக அந்தந்த மொழி நடிகர்களை நடிக்க வைக்கின்றனர்.
சத்யராஜ், விஜய் சேதுபதி, பிரபு, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட தமிழ் நடிகர்களையும் சுதீப், ரவிகிஷன் உள்ளிட்ட கன்னட நடிகர்களையும் தெலுங்கு படங்களில் நடிக்க வைக்கின்றனர். பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சாஹோ, இந்த படத்தில் அவரை தவிர மற்றவர்கள் யாரும் தெலுங்கு நடிகர்கள் இல்லை. அதேபோல சைரா நரசிம்மரெட்டி படத்திலும் சிரஞ்சீவிவை தவிர மற்ற அனைவரும் பிற மொழி நடிகர்கள்தான் அதிகமாக இருந்தனர்.
ஹீரோ கதாபாத்திரத்தை தவிர தந்தை, தாய், அண்ணி, தங்கை கதாபாத்திரங்களில் நடிக்க பிறமொழி நடிகர்களையே அழைக்கின்றனர். அவர்களுக்கு கேரவன், நட்சத்திர ஓட்டலில் ரூம், அதிக சம்பளம் கொடுக்கின்றனர். இதனால்தான் அவர்கள் தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். தெலுங்கு படங்களில் தெலுங்கு நடிகர்களுக்கே வாய்ப்பு அளிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளனர்.
பாகுபலி படத்திற்கு பின் சத்யராஜுக்கு அதிக வாய்ப்பு தெலுங்கில் இருக்கிறது. இதுபோல சைரா படத்திற்கு பின் விஜய் சேதுபதிக்கு பல வாய்ப்புகள் வந்த வண்ணம் இருப்பதாக தெலுங்கு வட்டாரங்களில் சொல்லப்படுகிறது குறிப்பிடத்தக்கது.