இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பிரபலமான இந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், சென்ற ஆண்டு ஜூன் 14ஆம் தேதி மும்பையில் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்திற்குக் காரணம், பாலிவுட்டில் நடக்கிற குடும்ப ஆதிக்கமே என்று சமூக ஊடகங்களில் பலரும் குற்றம்சாட்டினர். சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கை மும்பை காவல்துறை, பீகார் காவல்துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய ஐந்து அமைப்புகள் விசாரித்தன. இருப்பினும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற மர்மத்திற்கு இதுவரை அவர்களால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கார் விபத்தில் பலியாகியுள்ளனர். ஹரியானா மாநிலத்தின் மூத்த காவல்துறை அதிகாரியாக இருக்கும் ஓ.பி. சிங்கின் சகோதரி கீதா தேவியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின்னர் அவர்கள் பாட்னாவில் உள்ள வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது பீகார் மாநிலத்தின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த ட்ரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுஷாந்த் சிங்கின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.