மலையாளத் திரையுலகில் படப்பிடிப்பு தளத்தில் நடிகைகள் மற்றும் வேலை செய்யும் அனைத்து நிலை பெண்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஹேமா கமிஷன் அமைக்கப்பட்ட நிலையில் அதன் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இதில் நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் மலையாள திரையுலகில் பெருமளவு இருந்து வருகிறதாகக் குறிப்பிட்டு பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து பல்வேறு நடிகைகள் கேரள நடிகர்கள், இயக்குநர்கள் மீது பாலியல் புகார்கள் அடுக்கி வருகின்றனர். இதனால் மலையாளத் திரையுலகில் பெரும் பரபரப்பு காணப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கேரள திருச்சூரில் மலையாள முன்னணி நடிகரும் பா.ஜ.க. எம்.பி மற்றும் இணை அமைச்சருமான சுரேஷ் கோபியிடம் ஹேமா கமிஷன் அறிக்கை தொடர்பாகக் கேள்வி கேட்க செய்தியாளர்கள் நின்று கொண்டிருந்தனர்.
ஆனால் அவர் செய்தியாளர்களை கண்டுகொள்ளாமல் அவரது காரை நோக்கி வேகமாக சென்றார். அப்போது ஒரு செய்தியாளர் ஹேமா கமிஷன் அறிக்கை தொடர்பாகக் கேள்வி கேட்டார். உடனே சுரேஷ் கோபி, அவரை தள்ளிவிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அவரது செயலுக்குக் கண்டனங்களும் எழுந்து வருகிறது.