அஜித்தின் தீனா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் பரீட்சையமானாவர் மலையாள நடிகர் சுரேஷ் கோபி. இவர் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இப்போது மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் கேரள ஃபிலிம் சேம்பர் ஆஃப் காம்மர்ஸ் (Kerala Film Chamber of Commerce) சார்பில் எர்ணாகுளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “ஒட்டக்கொம்பன் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தேன். அதைத் தூக்கி எறிந்த அவர் எத்தனை படங்கள் நடிக்கப் போகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு நான் 22 படங்கள் நடிக்கவுள்ளதாகக் கூறினேன். நான் எப்போதும் என் தலைவர்களுக்குக் கீழ்ப்படிவேன்.
ஆனால் சினிமா என்னுடைய பேஷன். சினிமா இல்லையென்றால் நான் இறந்துவிடுவேன். எனக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. ஆனாலும் செப்டம்பர் 6ஆம் தேதி படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளேன். அந்த படப்பிடிப்பில் எனக்கு நான்கு காவல் அதிகாரிகள் இருக்க வேண்டும். அதற்கான செலவைத் தயாரிப்பாளர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படியும் நடிக்கக் கூடாது என்று எனக்கு அழுத்தம் வந்தால், என்னுடைய இணையமைச்சர் பொறுப்பிலிருந்து விலகவும் நான் தயாராக இருக்கிறேன்” என்று பேசியுள்ளார்.