மலையாளத் திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து ஆய்வறிக்கை வெளியிட்ட ஹேமா கமிஷன் அறிக்கை, இந்திய திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை பொதுவெளியில் பகிர்ந்தனர். அந்த வகையில் மலையாள நடிகை ஒருவர் மூத்த நடிகர் சித்திக் மீது பாலியல் புகார் முன்வைத்தார். அதாவது சித்திக் 2016ஆம் ஆண்டு மஸ்கட் விடுதியில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியிருந்தார். ஆனால் சித்திக் இந்த புகாரை மறுத்திருந்தார்.
இதையடுத்து அந்த நடிகையின் புகாரின் அடிப்படையில் கடந்த ஆகஸ்டில் சித்திக் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து முன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தார் சித்திக். அப்போது சித்திக்கை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்.
இந்த நிலையில் சித்திக்கின் முன் ஜாமீன் மனு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், சித்திக் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, எதையும் நினைவுபடுத்த முடியவில்லை என கூறுவதாக தெரிவித்தார். மேலும் சித்திக் ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார். பின்பு வாதிட்ட சித்திக் தரப்பு வழக்கறிஞர், இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்தார். இவரது கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தது. மேலும் சித்திக்கை கைது செய்ய விதித்த இடைக்காலத் தடையையும் நீட்டித்து உத்தரவிட்டது.