Skip to main content

“ஒரு பெண் 10 வீட்டிற்குச் சென்று பேசி நலம் விசாரித்துவிட்டு வருகிறார். இதனால்...”- சூரி உருக்கம்

Published on 31/03/2020 | Edited on 31/03/2020

உலகளவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 
 

soori

 

 

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,85,807 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,820 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,65,659 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில் நடிகர் பரோட்டா சூரி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ” பச்சிளம் குழந்தைகளுக்குத் தெரிந்ததுகூட இங்கு நிறையப் பேருக்குத் தெரியவில்லை. நிறையப் பேரிடம் சொல்கிறேன். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். முக்கியமாக கிராமப்புற மக்களுக்குத்தான் சொல்றேன். ஏனென்றால் அங்கிருந்துதான் நிறைய பேர் தொலைபேசியில் பேசினார்கள். இந்த வைரஸ் தொற்றின் தீவிரம் கிராமப்புற மக்களுக்குத் தெரியவில்லை. கிரிக்கெட், கால்பந்து, வாலிபால் என விளையாடுகிறார்கள்.

தெரிந்த பையன் ஒருவனிடம் தொலைபேசியில் பேசினேன். கிரிக்கெட் எல்லாம் விளையாடக் கூடாது என்று சொன்னேன். நாங்கள் எல்லாம் தள்ளித் தள்ளித்தானே நின்று விளையாடுகிறோம். ஒன்றாகவா நின்று விளையாடுகிறோம் என்று கிண்டலடிக்கிறான். இவ்வாறு கிண்டல் பண்ணுவதற்கும், விதண்டாவாதம் பண்ணுவதற்கும் இது நேரமில்லை. உங்களைக் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன். பச்சிளம் குழந்தைகளுக்குத் தெரிவது கூட உங்களுக்குத் தெரிவதில்லை. இது நக்கல், கேலி பண்ணுவதற்கு இடமில்லை. தயவுசெய்து அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்.

வீட்டிலிருக்கும் பெண்களுக்குச் சொல்கிறேன். ஒரு பெண் 10 வீட்டிற்குச் சென்று பேசி நலம் விசாரித்துவிட்டு வருகிறார். நோய் ஒருத்தருக்கு ஒருத்தர் எனப் பரவிக் கொண்டே போகிறது. நம்மால் அடுத்தவருக்கும், அடுத்தவரால் நமக்கும் வரும். தயவுசெய்து அனைவரும் புரிந்துகொண்டு, கொஞ்ச நாளைக்கு வீட்டிற்குள்ளேயே இருங்கள். வீட்டை விட்டு வெளியே போகாதீர்கள். எவ்வளவோ பேர் நமக்காக வேலை செய்கிறார்கள். ஏன் அவர்கள் சொல்வதை யாருமே கேட்பதில்லை.

நம்மிடம் இருக்கும் காவல்துறையைக் கொண்டு வீட்டுக்கு ஒரு அதிகாரியைப் போட முடியாது. அவ்வளவு போலீஸ் எல்லாம் கிடையாது. அவர்களும் அனைவரையும் பார்க்க வேண்டும். தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். அனைவரும் கவனமாக வீட்டிற்குள் இருங்கள். வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். கிராமப்புற மக்களுக்குத்தான் முக்கியமாகச் சொல்கிறேன். கையெடுத்துக் கும்பிடுகிறேன். வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். அனைத்து மக்களையும் காப்பாற்றுங்கள். நீங்களும் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்." என்று தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய மகள் மற்றும் மகனும் கரோனா குறித்து பேசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


 

சார்ந்த செய்திகள்