சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இப்படம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி 38 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா மற்றும் ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி ஆகியோரை நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக சந்திதோம். அப்போது இருவரும் படம் தொடர்பான பல சுவாரஸ்யமான விஷயங்களை பேசியபோது, சூர்யாவின் அறிமுக காட்சி குறித்து பகிர்ந்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி பேசுகையில், “ஒரு படத்தில் ஸ்டார் ஹீரோவுடை ஓப்பனிங் சீன் மிகவும் முக்கியமானது. அதை படிப்படியாக காட்சிப்படுத்துவதில் சிவா கைதேர்ந்தவர். அஜித்துக்கு இதற்கு முன்பு இல்லாத வகையில் வீரம் படத்தில் அறிமுக காட்சியை சிவா காட்டியிருப்பார். அதே போல் கங்குவா படத்தில் சூர்யாவின் காட்சிதான் எனக்கு ரொம்ப பிடிக்கும். ரசிகர்களுக்கு எப்போ டா கங்குவா வருவாரு... என்ற ஆர்வத்தை தூண்டக்கூடிய வகையில், கங்குவா கதாபாத்திரதிரம் வருகை அமைந்திருக்கும். சூர்யாவின் அறிமுக காட்சிக்காக என்னிடமும் சண்டை பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தரிடமும் சிவா கலந்தோசித்து அந்த காட்சியை எடுத்திருந்தார். சூர்யாவின் அறிமுக காட்சிக்கு தியேட்டரில் பெரும் அளவில் வரவேற்பு கிடைக்கும். அதற்கு நான் 100 சதவிகிதம் உறுதியளிக்கிறேன். அந்த காட்சியை எப்போது பார்த்தாலும் கூஸ்பம்ஸாக இருக்கும்” என்றார்.
சிறுத்தை சிவா பேசுகையில்,“ஹீரோ படிப்படியாக மெருகேற்றி காண்பிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அதே போல் இந்த படத்தில் சூர்யாவின் அறிமுக காட்சி எப்படி இருக்க வேண்டும். எந்த அளவிற்கு இருக்க வேண்டும். எந்த மாதிரி எடுக்க வேண்டும் என்பதற்காக மூன்று டிராஃப்ட்கள் எழுதினேன். அதில் மூன்றாவது டிராஃப்டை என்னுடைய குழுவுடன் கலந்தாலோசித்து அதன் பின்பு அதை படமாக எடுத்தோம். இதற்கு ஒளிப்பதிவாளர் வைத்த கேமரா ஆங்கிள்கள் அந்த காட்சியை மெருகேற்றி காண்பிக்க பெரிதும் உதவியது. மதன் கார்க்கியின் வரிகளில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் கங்குவா கதாபாத்திரம் வரும்போது பழங்குடியின ராஜா மாதிரி தோன்றுவார். அது பார்பதற்கே கூஸ்பம்ஸாகவும் வைப்-ஆகவும் இருக்கும். அந்த காட்சி சிறந்த திரையரங்க அனுபவத்தை கொடுக்கும் என்பதை என்னால் பெருமையாக சொல்ல முடியும்” என்று கூறினார்.