சூர்யா நடிப்பில் பான் இந்திய படமாக வெளியாகவிருக்கும் திரைப்படம் கங்குவா. இப்படத்தில் பாலிவுட்டில் பிரபலங்களான திஷா பதானி கதாநாயகியாகவும் பாபி தியோல் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி 38 மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவாவை சந்தித்தோம். அப்போது படம் குறித்து பல்வேறு விஷயங்களை பேசிய அவர், கடவுள் நம்பிக்கை குறித்தும் தனது பார்வையை பகிர்ந்துள்ளார். அவர் பேசியதாவது, “ஆன்மிக வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்கை, தொழில் வாழ்க்கை என அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரை அது குறிப்பிட்ட மதம் அல்லது கடவுள் சார்ந்த கான்சப்ட் கிடையாது. அது ஒரு யுனிவர்ஸல் உணர்வு. இறை அருளை உணரும் தருணம் மிகவும் அழகானது. எனக்கு அது அமைந்தது. நமக்கு மேல் ஒரு பெரிய சக்தி இருக்கிறது. அது நம்மை வழிநடத்துறது. உண்மை, நேர்மை, அன்பு இந்த செயல்கள் மூலம் அந்த உணர்வை உணரமுடியும். இதற்கு பல வடிவங்களும் பல உருவங்களையும் நாம் கொடுத்திருக்கிறோம். என்னுடைய வாழ்க்கையை வழி நடத்துவது மிகப்பெரிய இறை சக்திதான் என்று மிகவும் நம்புகிறேன். அது என்னிடம் மனிதநேயம்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது. சக மனிதனை எந்த காரணத்தைக் கொண்டும் காயப்படுத்தக் கூடாது. இதை மிகப்பெரிய இறை விஷயமாக பார்க்கிறேன்.
அதே போல் நம்மை வழிநடத்தும் அந்த சக்திக்கு எல்லாமே தெரியும். அந்த கடவுளுக்கு, நாம் அடுத்ததாக என்ன சொல்லப்போகிறோம் என்பது கூடத் தெரியும். இருந்தாலும் அதைக் கேட்டுக்கொண்டிருப்பார். ஆனால் அந்த கடவுள் நம்மிடையே பேசுவதை நாம் கேட்கிறோமா? இல்லையா? என்பதில்தான் விஷயம் இருக்கிறது. கடின உழைப்பு, அன்பான குணம், இறை அருள் இந்த மூன்றும் ஒருவரை வழி நடத்தினால் அவர் பெருவாழ்வை வாழ்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.