இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இந்தியன் 2. கடந்த 1996ஆம் ஆண்டில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம், 28 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற ஜூலை 12ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இப்படம், இந்தியன் 3 ஆகவும் மூன்றாம் பாகமாகவும் வெளியாகவுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், விவேக், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தியன் 2 படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் கமல் உள்ளிட்ட படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், சென்னை, மும்பை என உலகமெங்கும் சில இடங்களில் இந்தியன் 2 படக்குழு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்து வருகின்றனர்.
அந்த வகையில், இயக்குநர் ஷங்கர் ஒரு நேர்காணலில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்த போது, தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் தொடர்பான விவரத்தை தெரிவித்தார். அடுத்த தலைமுறைக்கு என்ன மாதிரியான படங்களை நீங்கள் கொடுக்க விரும்புகிறீர்கள் என்று ரசிகர் ஒருவர், ஷங்கரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், “எனக்கு நிறைய ஐடியாக்கள் இருக்கிறது. தற்போது எனக்கு 3 ஐடியாக்கள் உள்ளன. ஒன்று வரலாற்று சிறப்புமிக்க ஒரு திரைப்படம். மற்றொன்று, ஜேம்ஸ் பாண்ட் பாணியில் ஒரு படம். மற்றொன்று 2012 திரைப்பட பாணியில் ஒரு சை ஃபை திரைப்படம். இது தான் என்னுடைய பிளான். இந்த மூன்று வகையான திரைப்படங்களும் மிகப் பெரிய பட்ஜெட் கொண்டது. அனைத்து கதைகளும் மிகப்பெரிய பட்ஜெட்டையும், நிறைய விஎஃப்எக்ஸ் காட்சிகளை கேட்கிறது. இந்த படங்களில் எல்லாம் உலகில் உள்ள அனைத்து புதிய தொழில்நுட்பத்தையும் கொண்டுவர திட்டமிட்டுள்ளேன்” எனக் கூறினார்.