கமல் - ஷங்கர் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வந்த இந்தியன் 2, கடந்த 12ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. லைகா தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த், விவேக், பிரியா பவானி ஷங்கர், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழியில் உலகம் முழுவதும் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களே பெற்று வந்தது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து 12 நிமிடக் காட்சிகளை தற்போது நீக்கியுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்தியன் 2 படத்தை தொடர்ந்து இந்தியன் 3 படமும் உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இப்படத்தில் சில காட்சிகளை நீக்கச் சொல்லி திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர். திண்டுக்கல்லில், அம்மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம், நடைபெற்றது. அதில், சங்கத்தின் மாவட்ட தலைவர் தனராஜ், “இந்தியன் 2 திரைப்படத்தில் மனோ பாலா வரும் காட்சியில் இ-சேவை மையத்தினர் 300 ரூபாய் கொடுத்தால் மட்டுமே சேவை செய்ய முடியும் எனத் தவறுதலாக சித்தரித்து எடுக்கப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும். இந்த காட்சிகளினால் இ-சேவை மைய உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் குறிப்பிட்ட அந்த காட்சியை நீக்க, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் திரைப்பட இயக்குநர் சங்கர் உள்ளிட்ட படக்குழுவினருக்கும் கோரிக்கை வைக்கிறோம்.
இது தொடர்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், மாவட்ட ஆட்சியரிடம் இ-சேவை உரிமையாளர் நல சங்கம் சார்பாக இயக்குநர் ஷங்கர் மீது புகார் மனு அளிக்கப்பட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அதோடு நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்படும்” என்றார்.