தமிழில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் எனப் பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் செல்வராகவன். இதைத் தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்பு ஹீரோவாக சாணிக் காயிதம், பகாசுரன் உள்ளிட்ட படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஃபர்ஹானா, மார்க் ஆண்டனி, ராயன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படங்களைத் தொடர்ந்து, தெலுங்கில் ரவி தேஜா - கோபிசந்த் மலினேனி கூட்டணியில் உருவாகும் புது படத்தில் நடிக்கிறார்.
இதனிடையே தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் செல்வராகவன் அவ்வப்போது வாழ்க்கையின் தத்துவங்கள் குறித்தும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள் குறித்தும் பதிவிட்டு வருவார்.இந்த நிலையில் தமிழ் மக்கள் அனைவரும் தமிழில் பேச வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோவில், “எனக்கு ஒரு வேண்டுகோள். கெஞ்சி தாழ்மையோடு கேட்கிறேன். முக்கியமா தமிழ் நாட்டு மக்களுக்கு. தமிழ் இனி மெல்ல சாகும் என பாரதியார் சொன்னார். இது எந்தளவு உண்மை என்றால், தமிழ் ஏற்கனவே ஐ.சி.யு-வில் வெண்டிலேட்டரில் படுத்துக் கொண்டிருக்கிறது. எங்க பார்த்தாலும் இங்கிலீஷ். இங்கிலீஷ் தெரியாதவன் கூட திக்கி திணறி இங்கிலீஷில் பேச ட்ரை பன்றான். தமிழ்ல பேசுறத அவமானமா அருவருக்கத்தக்கதா நினைக்கிறாங்க.
எனக்கு இங்கிலீஷில் பேசுற அவசியம் புரியுது. ஸ்கூல்ல, காலேஜ்ல இங்கிலீஷ் தெரியாம நான் எவ்ளோவோ அவமானப்பட்டிருக்கிறேன். கூனி குறிகியிருக்கேன். கிளாசில் இருக்குற அனைவரும் இங்கிலீஷ்ல தான் பேசுவாங்க. காலேஜிலையும் இங்கிலீஷ்ல தான் பேசுவாங்க. எப்படியோ வெட்கப்பட்டு படிச்சு முடிச்சிட்டேன். அதுக்கப்புறம் தான் எனக்கு ஒரு வெறி வந்துச்சு. இங்கிலீஷ் புக்ஸை அதிகம் படிக்க ஆரம்பிச்சேன். அர்த்தம் தெரியாத போது டிக்ஷனரியை பக்கத்துல வைச்சி பார்த்துப்பேன். இது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். ஆனால் பழக பழக ஈஸியாகிவிடும். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பேசி சினிமாவுக்கு வந்த பிறகுதான் நல்லா இங்கிலீஷ்ல பேச ஆரம்பிச்சேன். இன்னைக்கும் அவ்ளோ கரெக்டா இங்கிலீஷ் பேசுறனான்னு தெரியாது. அதை பற்றி கவலையும் கிடையாது. நான் தமிழன். எங்க போனாலும் தமிழில் பேசுவேன். அதனால் எங்க போனாலும் தலைநிமிர்ந்து தமிழில் பேசுங்க. அதை அவமானமா பார்த்தா மொரச்சு பார்த்து, என்ன யோசிக்கிறீங்கன்னு கேளுங்க. தமிழில் பேசும்போது முகம் சுழிக்க மாதிரி ஒரு பொன்னு பார்த்தால் அப்படிப்பட்ட பொன்னு தேவையில்லை. தமிழ் பேசுற பொன்னே நமக்கு போதும். இதை ஏன் சொல்றேன்னா, உலகத்துல எந்த நாட்டுக்கு போனாலும் சரி எல்லாரும் அவுங்க தாய் மொழியில் தான் பேசுவாங்க. உலகத்துலையே பழமையான மொழி தமிழ் மொழி” என்றார்.