Skip to main content

“சேகுவாரா நினைத்தது போல் படத்தில் விமல் குடும்பம் நினைத்திருக்கிறது” - சீமான் பாராட்டு 

Published on 18/10/2024 | Edited on 18/10/2024
seeman praises vimal bose venkat in sir movie

போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சார்’. இப்படத்தில் கதாநாயகியாக சாயா தேவி நடித்திருக்க சிராஜ் , சரவணன், ரமா, ஜெயபாலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.எஸ்.எஸ். பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தை வெற்றிமாறன் தனது கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி மூலம் வழங்குகிறார். இன்று(18.10.2024) இப்படம் யு/ஏ சான்றிதழுடன் படம் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு விஜய் சேதுபதி, இயக்குநர் சற்குணம், புஷ்கர் மற்றும் காயத்ரி உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “என் அன்புக்குரிய தம்பி நடிகர் போஸ் வெங்கடை நடிகராகத் தான் பார்த்திருக்கிறோம். என்னுடைய அப்பா பாரதிராஜாவின் ஈரநிலம் திரைப்படத்தில் நன்றாக  நடித்திருந்தார், ஆனால் இயக்குநராக அவரது இரண்டாவது படம் சார்.  கல்வி மறுக்கப்பட்ட சமூகத்திலிருந்து நாங்கள் எல்லாம் கற்று,  இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம்.  பல கிராமங்களில் எங்களது பெற்றோர்கள், எல்லாம் 50 கிலோ மீட்டர் தாண்டி, பயணித்ததே இல்லை. அப்படி இருக்கும் இந்த வேளையில் பழமைவாத நம்பிக்கைகள், அறிவை வளர்க்கும் இந்த கல்வியை, உள்ளே விடாமல் தடுக்கிறது, எவ்வளவு இடையூறாக இருக்கிறது, முட்டுக்கட்டை போடுகிறது, என்பதை மிக ஆழமாக, அழுத்தமாகத் தம்பி இந்த திரைப்படத்தில் எடுத்துக் காட்டி இருக்கிறார். 

இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர் விமல், தம்பி சரவணன், எல்லோரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். பள்ளி மாணவர்களாக நடித்திருக்கும் அந்த சிறுவர்கள், இத்தனை சின்ன வயதில், எப்படி இத்தனை அழகான நடிப்பைத் தந்தார்கள், என்பதும் எப்படி நடிக்க வைத்தார் என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது. பழமை வாதத்தை உடைத்து, கல்வியை நம் மக்களிடம் சொல்லிக் கொண்டு செல்ல, நம் முன்னோர்கள் எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என்பதை, இந்த திரைப்படம் வெகு அழகாக எடுத்துக்காட்டுகிறது. மருத்துவம் போய்ச் சேராத மக்களுக்கு எப்படி சேகுவாரா மருத்துவத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்தாரோ, அதேபோல் கல்வி அறியாத மக்களுக்குக் கல்வியைக் கொண்டு சேர்க்க நினைக்கும், ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர், அவருடைய மகன், அவருடைய பேரன் என மூன்று தலைமுறை செய்த சேவை தான் இந்த திரைப்படம். இறுதியாகத் திரைப்படத்தை ஆசிரியர்களுக்குச் சமர்ப்பணம் செய்யும் அவருடைய குரலே  நமக்கு  சிலிர்ப்பூட்டுகிறது. 

நம் தாய் பத்து மாதம், நம்மைக் கருவறையில் சுமந்தாள். ஆனால் ஆசிரியர் பெருமக்கள் 20 ஆண்டுகள் கல்விக் கருவறையில் நம்மை சுமக்கிறார்கள், என்பதைப்  போஸ் வெங்கட் இப்படத்தில் மிக அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார். ஒரு நடிகராக அவரை நமக்குத் தெரியும், ஒரு மிகச்சிறந்த படைப்பை உருவாக்கும் படைப்பாளனாக, இந்த திரைப்படம், அவரை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்” என்றார். 

சார்ந்த செய்திகள்