மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.
அந்தவகையில் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் அவை...
"பொன்னியின் செல்வன் புத்தகத்தில் இருப்பதை அப்படியே படமாக்க வேண்டும் என்றால், பத்து பாகமாக எடுக்க வேண்டும், அதனால் மணிரத்னம் நாவலின் கதையின் கரு மாறாமல் அதை ஒட்டியே படத்தை எடுத்துள்ளார். அதில் எனது கதாபாத்திரமான பெரிய பழுவேட்டரையர், போர்க்களத்தில் 64 விழுப்புண்கள் பெற்ற மாவீரன், சோழ நாட்டிற்கு கட்டுப்பட்டவன். சுந்தர சோழனுக்கு நண்பன், நாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய மனிதன் தான். ஆனால், அழகுக்கு மயங்கி, நந்தினியை திருமணம் செய்து கொண்டு, அவளின் எண்ணம் என்னவென்று புரியாமலே அவளுடன் பயணித்துக் கொண்டிருக்கும் கதாபாத்திரம்.
ஓரு நாள் மணிரத்னம் என்னை அவரது அலுவலகத்துக்கு அழைத்து பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நீங்கள் தான் நடிக்கிறீங்கன்னு சொன்னதும் பெரிய மகிழ்ச்சி. ஏனென்றால் இந்த கதாபாத்திரம் அப்படிப்பட்டது. இந்த படத்தில் நடித்ததே பெரும் பாக்கியம் என்றுதான் படத்தில் நடித்த எல்லாரும் நினைத்து இருப்பார்கள். ஏன்னா வீரபாண்டிய கட்டபொம்மன் சென்று சொன்னதும் நமக்கு முதலில் நியாபகம் வருவது சிவாஜி சார்தான். அதேபோல் கர்ணன் என்று சொன்னால் சிவாஜி சார்தான் நினைவுக்கு வருவார். அதைபோல வருங்காலத்தில் இந்த கதையைப் படிப்பவர்கள் எல்லாம், வந்தியத்தேவனாக கார்த்தி, பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், மதுராந்தகனாக ரஹ்மான், பெரிய பழுவேட்டைராயராக நான், சிறிய பழுவேட்டைராயராக பார்த்திபன், குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி, என்று அந்த கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டும் வாய்ப்பை பெற்று இருக்கிறோம்.
இந்த திரைப்படத்திற்கு பிறகு, சோழர்களின் பெருமை தமிழகத்தை தாண்டி பேசப்படும். அவர்களின் வீரம், அடிப்படை வசதி, கடல்கடந்து வணிகம் செய்வது, கடல் கடந்து போரிட்டு பல்வேறு நாடுகளை வென்று 9 ஆம் நூற்றாண்டில் இருந்து 12 ஆம் நூற்றாண்டு வரை மிகவும் செழிப்பாக ஆட்சி செய்த சோழ அரசர்களை பற்றியும், அவரது சாம்ராஜ்யத்தை பற்றியும் பேசப்படும். வரலாறு படித்தவர்களுக்கு தெரிந்திருந்தாலும், படிக்காதவர்கள் மத்தியில் சோழர்களின் சாம்ராஜ்யத்தை பற்றி இப்படம் தெரியப்படுத்தும். அனைவரும் சோழர்களை பற்றி தெரிந்து கொண்ட பிறகு இந்திய வருகிறவர்கள் தாஜ்மஹாலை எப்படி வியந்து பார்க்கிறார்களோ, அப்படி தஞ்சைக்கு வந்து பெரிய கோவிலையும், கங்கைகொண்ட சோழபுரத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலை இந்த படம் தூண்டும், தூண்ட வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றல் தஞ்சை கோவிலை கட்டிய விதம், அனைவரையும் வியப்படைய செய்யும், நாம் இந்தோனேஷிய அங்கோர்வாட் சென்று பார்க்கும் போது, மனிதனால் இதெல்லாம் கட்டப்பட்டது என்று ஏற்படும் பிரமிப்பு, தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்லும் போது ஏற்படும். உங்களின் எதிர்பார்ப்பை கண்டிப்பாக இந்த படம் பூர்த்தி செய்யும்" எனத் தெரிவித்தார்.