திரைப்படங்களுக்கு இணையாக தொலைக்காட்சி சீரியல்கள் எடுக்கப்படும் காலம் இது. ஒரு காலத்தில் சீரியல் ஹீரோக்களை திரைத்துறையில் மதிக்காத நிலை இருந்தது. ஆனால், இன்று திரையில் வெற்றிகரமாக இருக்கும் பல நாயகர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்கள். கமல்ஹாசன், சூர்யா, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, விஷால் என பலரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார்கள். இன்னொரு புறம் தொலைக்காட்சி நாயகர்கள் திரைக்கு வருவதும் நிகழ்ந்திருக்கிறது. சந்தானம், சிவகார்த்திகேயன் இருவரும் தொலைக்காட்சியிலிருந்து திரைக்கு வந்து பெரிய வெற்றியை பெற்ற உதாரணங்கள். தற்போது செந்தில், ரியோ உள்ளிட்ட சில தொலைக்காட்சி பிரபலங்களும் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். இந்த வழியில் யூ-ட்யூப் பிரபலங்களும் சினிமாவுக்கு வருவது அடுத்த கட்டமாக நிகழ்ந்து வருகிறது.
இப்படி ஊடக எல்லைகள் தாண்டி திறமையானவர்கள், ரசிகர்களை வசீகரிக்கக்கூடியவர்கள் வென்று வருகிறார்கள். அந்த வரிசையில் விஜய் டிவி 'சரவணன் மீனாட்சி' தொடரில் 'வேட்டையன்' என்ற புகழ்பெற்ற பாத்திரத்தில் நடித்த கவின் 'நட்புனா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் நாயகனாக என்ட்ரி கொடுக்கிறார். முன்பே 'சத்ரியன்' உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் கதாநாயகனாக நடிப்பது 'நட்புனா என்னானு தெரியுமா' படத்தில்தான். 'சரவணன் மீனாட்சி' தொடர் விஜய் டிவியின் மிகப்பெரிய வெற்றித் தொடராகும். பல பார்ட்கள் கண்ட இந்தத் தொடரில் 'வேட்டையன்' பாத்திரத்தில் நடித்து இளம் பெண்களை ரசிகர்களாகப் பெற்றவர் கவின். இன்றும் இவரின் அடையாளமாக வேட்டையன் பாத்திரம் இருக்கிறது.
கவினுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ள இந்தப் படத்தில் 'கனா' இயக்குனர் அருண்ராஜா காமராஜும் நடித்துள்ளார். ராஜு, அழகம்பெருமாள், ’மொட்ட’ ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்தப் படத்துக்கு தரண் இசையமைத்துள்ளார். பாடல்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி, மிர்ச்சி விஜய் எழுதியுள்ளனர். பல தடைகளைத் தாண்டி இன்று (17 மே 2019) வெளிவரும் இந்தப் படம் நட்பைக் கொண்டாடும் ஒரு இளமைக் கொண்டாட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவா அரவிந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சந்தானம், சிவகார்த்திகேயன் என வெற்றி வரிசையில் சேர கவினை வாழ்த்துவோம்.