'பாடும் நிலா பாலு' என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74 வயது) நேற்று (25.09.2020) உடல் நலக் குறைவால் மறைந்தார்.
கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் 01.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.பி.பி.யின் திடீர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், "தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த திரு.எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அன்னாருக்கு காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்'' என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதற்குப் பிரபலங்கள் பலரும் நன்றி தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சரத்குமார் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...
"இனிமையான குரலால் இன்னிசை உலகை ஆண்ட பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருது பெற்ற எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் புகழுக்கு, பெருமை சேர்க்கும் விதமாக அவரது உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் தமிழக மக்களின் சார்பாக எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்." எனக் கூறியுள்ளார்.