தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர், விஜய், சூர்யா, சிம்பு, அல்லு அர்ஜூன், நானி போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர்.
இதனிடையே, நடிகை சமந்தா டோலிவுட்டின் பிரபல நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமான 4 ஆண்டுகளில் நாக சைதன்யாவை தனிப்பட்ட காரணங்களால் விவாகரத்து செய்தார். இருவரும் விலகி தனியாக வசித்து வருகின்றனர். இதனிடையே, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா நடிப்பில் இருந்து தற்காலிக பிரேக் எடுத்துக் கொள்ளப்போவதாக அறிவித்தார். அதன் பின்னர், வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்த பிறகு நீண்ட நாள்களாக ஓய்விலிருந்த சமந்தா கடந்த ஆண்டுதான் படங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். தற்போது, ஓய்விலிருந்து திரும்பி உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘ஹெல்த் பாட்கேஸ்ட்’ ஒன்றைச் செய்து வருகிறார்.
இந்த நிலையில்,விவாகரத்து, மயோசிடிஸ் நோய்க்கு பிறகு ஏற்பட்டிருக்கும் வாழ்க்கை மாற்றம் குறித்து சமந்தா பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் சில விஷயங்களை மாற்றிக்கொள்ள விரும்புகிறோம். அது போல், என்னிடம் இருந்த விஷயங்களை நான் கடந்து சென்றிருக்க வேண்டுமா என்று சில சமயங்களில் நினைத்து பார்ப்பேன். ஆனால், எனக்கு வேறு வழியில்லை.
கடந்த மூன்று வருடங்களில் சில விஷயங்கள் நடந்திருக்கக் கூடாது என்று நினைத்திருக்கிறேன். இதை பற்றி, நான் சிறிது நேரத்திற்கு முன்பு என் நண்பருடன் விவாதித்தேன். ஆனால், வாழ்க்கை உங்கள் மீது வீசும் அனைத்தையும் நீங்கள் சமாளிக்க வேண்டும். சிலவற்றில் இருந்து வெளியே வரும் போது தான் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நான் முன்பை விட இப்போது வலுவாக இருக்கிறேன். அதற்கு காரணம் ஆன்மீக ஈடுபாடு தான்” எனக் கூறினார்.