தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர், விஜய், சூர்யா, சிம்பு, அல்லு அர்ஜூன், நானி போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர். கடந்த 2010 ஆம் ஆண்டு ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக சமந்தா தொடங்கிய திரையுலகப் பயணம் குறுகிய காலத்தில் பேன் இந்திய அளவில் வளர்ந்துள்ளார்.
இதனிடையே, நடிகை சமந்தா டோலிவுட்டின் பிரபல நடிகர் நாக சைதன்யா உடன் காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணமான 4 ஆண்டுகளில் நாக சைதன்யாவை தனிப்பட்ட காரணங்களால் விவாகரத்து செய்தார். இருவரும் விலகி தனியாக வசித்து வருகின்றனர். இதனிடையே, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா நடிப்பில் இருந்து தற்காலிக பிரேக் எடுத்துக் கொள்ளப்போவதாக அறிவித்தார். அதன் பின்னர், வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்த பிறகு நீண்ட நாள்களாக ஓய்விலிருந்த சமந்தா கடந்த ஆண்டுதான் படங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். இதையடுத்து ஆங்கில வெப்சீரிஸான ‘சிட்டாடெல்’-இன் இந்தியன் ஸ்பின் ஆஃப் வெர்ஷனில் நடித்தவர், கொஞ்ச நாள்கள் எந்தப் படங்களிலும் கமிட்டாகாமல் ஓய்வெடுக்கப்போவதாகக் கூறினார்.
தற்போது, ஓய்விலிருந்து திரும்பி உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘ஹெல்த் பாட்கேஸ்ட்’ ஒன்றைச் செய்து வருகிறார். அந்த வகையில், ஃபிட்னஸ் பயிற்சியாளர் அல்கேஷ் ஷரோத்ரியுடன், சமந்தா இணைந்து, ‘டேக் 20’ என்ற பெயரில் பாட்காஸ்டில் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களைப் பேசி வந்தார். அப்போது, சமந்தாவின் வீடியோவுக்கு கீழ் ஒருவர், ‘ஆரோக்கியமற்ற ஐஸ்கிரீம், கூல் டிரிங் போன்ற விளம்பரங்களில் விளம்பர தூதராக சமந்தா நடித்திருக்கிறார்’ எனக் கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலளித்த சமந்தா, “நான் கடந்த காலத்தில் தெரியாமல் அது போன்ற தவறை செய்துவிட்டேன். ஆனால், உண்மை தெரிந்த பிறகு அது போன்று விஷயங்களை விளம்பரப்படுத்துவதை நிறுத்திவிட்டேன். இப்போது விழிப்போடு இருக்கிறேன். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” எனத் தெரிவித்தார்.