Skip to main content

'ஷில்பா ஷெட்டிக்கு கிடைத்த நீதி தனக்கும் கிடைக்கும்' - நம்பிக்கையில் சமந்தா!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

Samantha Ruth Prabhu

 

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை சமந்தா, சமீபத்தில் தன்னுடைய கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். இது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், சமந்தா -  நாக சைதன்யா தம்பதியின் விவாகரத்திற்கான காரணம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுவந்தன. குறிப்பாக நடிகை சமந்தாவை நேரடியாகத் தாக்கி பலரும் பதிவிட்டுவந்தனர். அவையனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் வகையில், தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் நடிகை சமந்தா சமீபத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். மேலும், தன்னைப் பற்றி அவதூறாக கருத்து வெளியிட்ட ஊடகங்கள், யூடியூப் சேனல்கள் மற்றும் வழக்கறிஞர் ஒருவர் ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கும் தொடர்ந்தார்.

 

இந்த வழக்கு விசாரணை ஹைதராபாத்தில் உள்ள குகட்பல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, சமீபத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை மேற்கோள்காட்டி சமந்தா தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். முன்னதாக, ஆபாச வீடியோ தயாரித்த வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்ரா கைதுசெய்யப்பட்ட விவகாரத்தில், தன்னுடைய பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊடகங்கள் செயல்பட்டதாக ஷில்பா ஷெட்டி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், ஷில்பா ஷெட்டியை பற்றி அவதூறு செய்திகள் வெளியிட நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

 

இந்த நிலையில், நடிகை சமந்தா தரப்பு வாதத்தைக் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டிக்கு கிடைத்ததைப் போன்ற தீர்ப்பு தனக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சமந்தா இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்