Skip to main content

“சொன்ன போது கேட்கல; ஆனா வச்சு செஞ்சாங்க” - எஸ்.ஏ சந்திரசேகர்

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
sa chandrasekhar latest speech

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் டைரக்டராக அறிமுகமானவர் எஸ்.எழில். விஜய்க்கு திருப்புமுனையாக இருந்த இந்த படம் ஜனவரி 29ம் தேதி வெளியாகி 25 வருடங்கள் ஆகிறது. இதை, எழில்25 விழாவாகவும், அவர், இன்ஃபினிட்டி கிரியேஷ்ன்ஸ் பி.ரவிசந்திரன் தயாரிக்கும் விமல் நடிக்க இப்போது டைரக்ட் செய்து வரும் தேசிங்குராஜ2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவாகவும் நடந்தது. இந்த நிகழ்வில் பார்த்திபன், பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி, எஸ்.ஏ சந்திரசேகர், கே.எஸ் ரவிக்குமார், பாக்கியராஜ், ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

இதில் இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் பேசும்போது, “கடந்த இரண்டு வருடங்களாக மாலை நேரங்களில் நடக்கும் எந்த விழாவிலும் நான் கலந்து கொள்வதில்லை. சமீபத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் கூட கலந்து கொண்டு உடனே கிளம்பி விட்டேன். அப்படிப்பட்ட ஒரு கொள்கையுடன் கூடிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் என்னால் எழில் கூப்பிட்டபோது மறுக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஒரு படப்பிடிப்பிலிருந்து சீக்கிரமே கிளம்பி வந்தேன். துள்ளாத மனமும் துள்ளும் படம் இயக்கிய காலகட்டத்தில் அவருடன் நான் பழகி இருக்கிறேன். வெற்றி பெற்ற சமயத்திலும் இடையில் தோல்விகளை கண்ட போதும், மீண்டும் வெற்றியைத் தொட்ட போதும் எப்போதுமே ஒரே மாதிரி பழகும் ஒரு நல்ல இதயம் கொண்டவர். 

என் மகன் விஜய் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும், துள்ளாத மனமும் துள்ளும் படம் அவரது வாழ்க்கையில் ஒரு மைல்கல். நான் கதை கேட்கும்போது விஜய்யின் அப்பா என்கிற எண்ணத்தில் கதை கேட்க மாட்டேன். ஒரு சாதாரண பப்ளிக்கின் மன நிலையில் தான் கதை கேட்பேன். ஒரு நேர்மையான உதவி இயக்குநரின் பார்வையில் சில கேள்விகளை கேட்பேன். அப்படி நான் கேட்ட கேள்விகளை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு அதற்காக படத்தில் பதில் சொன்னவர் இயக்குநர் எழில். இத்தனை வருடங்களாக அவர் இந்த திரையுலகில் இருக்கிறார். யார் ஒருவர் தாயை மிகவும் உயர்வாக மதிக்கிறாரோ அவரை கடவுள் உயரத்திற்கு கொண்டு செல்வார். இது என் வாழ்க்கையில் நான் பார்த்தது.

இப்போது திரைக்கதைக்கு யாரும் மரியாதை கொடுப்பதில்லை. ஒரு ஹீரோ கிடைத்தால் போதும், எப்படி வேண்டுமானாலும் படம் பண்ணிவிடலாம். ஹீரோவுக்காக படம் ஓடி விடுவதால் நாம் பெரிய இயக்குநர் என நினைத்துக் கொள்கிறார்கள். மனதில் இருப்பதைச் சொல்கிறேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சமீபத்தில் ஒரு படம் பார்த்துவிட்டு அந்த இயக்குநரிடம் ஃபோன் போட்டு வாழ்த்தினேன். முதல் பாதி நல்லாயிருப்பதாக சொல்லி, இரண்டாம் பாதி ஒரு மாதிரி இருக்கு என்றேன். உடனே அவர், நான் சாப்பிட்டு கொண்டிருப்பதாக சொன்னார். தொடர்ந்து, அந்த மதங்களில் அப்படி நம்பிக்கை இல்லை என்றும், தகப்பனே மகனை கொல்வதெல்லாம் இருக்காது என்றும் நான் சொல்லிகொண்டிருக்கும் போது, மீண்டும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாக சொல்லி கட் பண்ணிவிட்டார். படம் வெளியாவதற்கு 5 நாள் முன்னாடியே அந்த படத்தை நான் பார்த்துவிட்டேன். ஆனால் படம் வெளியான பிறகு எல்லாரும் வச்சு செஞ்சாங்க.  

படங்களை இன்னும் சிறப்பான திரைக்கதையுடன் பண்ணினால் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்பதற்காக இதை சொல்கிறேன். இன்றைய இயக்குநர்களுக்கு விமர்சனங்களை தாங்கிக் கொள்கின்ற பக்குவம் இல்லை, தைரியம் இல்லை. அதேபோல ஒரு கதை சொன்னதும் அந்த இயக்குநரை எழுந்து நின்று கட்டிப்பிடித்தேன் என்றால் அது இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ்தான். ஆனாலும் துப்பாக்கி கதையைக் கேட்ட பிறகு ஒரு உதவி இயக்குநராக அந்த படத்தில் ஸ்லீப்பர் செல்ஸ் குறித்து ஒரு கேள்வியை கேட்டேன். அப்போது பதில் சொல்லாத அவர் என்னுடைய கேள்விக்கு படத்தில் பதிலளித்திருந்தார். அவருடைய பக்குவம் அது. 

எழிலிடம் இதேபோன்று ஒரு கேள்வியை துள்ளாத மனம் துள்ளும் கதை சொன்ன சமயத்தில் கேட்டபோது அந்த படத்தில் அதற்கான பதிலை சொன்னார். அந்த படம் வெள்ளி விழா கொண்டாடியது. அப்போது விஜய் என்ன பெரிய பெரிய சூப்பர் ஸ்டாரா? இல்லையே.. அந்த கதை அவரை தூக்கிச்சென்றது. இளைஞர்கள் நல்ல கதையுடன் வாருங்கள். உங்களுக்கான பொறுப்புணர்வு இருக்க வேண்டும். சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்றால் இன்றைய இயக்குநர்கள் தங்கள் படத்தின் ஹீரோக்களை அப்படி வடிவமைக்க வேண்டும். காரணம் இன்றைய இளைஞர்கள் ஹீரோக்களை பின் தொடர்கிறார்கள். படத்தில் ஒரு மூன்று நிமிடம் ஆவது நல்ல விஷயத்தை சொல்லுங்கள் என உங்கள் காலைத் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்” என பேசினார்.

சார்ந்த செய்திகள்