எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் சார்பில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு 'திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கப்பட்டது. அதில் பேசிய அவர், “நான் என்ன சாதனை செய்தேன் எனத் தெரியவில்லை. இதுவரை 70 படங்களை இயக்கியிருக்கேன். விஜயகாந்த், ரஹ்மான், பிரியங்கா சோப்ரா, சிம்ரன் போன்றவர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். இயக்குநர் ஷங்கர் என்னிடமிருந்து போனவர். இதெல்லாம் சாதனையா.
என்னை அறிமுகப்படுத்திய போது எங்கள் தளபதி விஜய்யின் அப்பா எனச் சொன்னார்கள். எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சு. என்னை ஒரு மனிதனாக மாற்றியது என் மனைவி. இந்த சாதனைக்கு என் மனைவிக்கு சாதனையாளர் விருது கொடுக்க வேண்டும். நான் இயக்கிய 70 படங்களில் 40 படம் 100 நாள் ஓடியிருக்கும். ஆனால் என் மனைவி, நண்பர்கள் என ஒரே ஒரு படம் தான் டைரக்ட் பண்ணினாங்க. அந்த படம் சில்வர் ஜூப்லி வாங்கினுச்சு. அப்போ என்னை விட அவுங்க தான பெரிய டைரக்டர். அதை விட உங்கள் தளபதி விஜய்யை தமிழ்நாட்டிற்கு கொடுத்திருக்காங்க. இவ்வளவு பெருமைக்குரிய ஆளை வைத்துக் கொண்டு எனக்கு கொடுப்பது நியாயமா. அதனால் அவுங்களுக்கு கொடுத்திருங்க.
இன்னொருத்தர் வீட்டில் இருக்கார். விஜய். இன்றைக்கு அவரின் அப்பா என்று தான் என்னை சொல்றாங்க. 1991-ல் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். அதற்கான மேடையை நான் அமைத்துக் கொடுத்தேன். அந்த மேடையில் ஃபெர்பாம் செய்து உங்களை ரசிகர்களாக மாற்றியது விஜய். ஒரு சின்ன புள்ளி வைத்தேன். அதை அழகாக கோலமாக மாற்றி வருகிறார். அவருக்கு கடுமையான உழைப்பு, நேரம் தவறாமை, சினிமா துறை ரொம்ப போட்டியான துறை, கொஞ்ச மிஸ் பண்ணினால் கூட இன்னொருத்தர் வந்துவிடுவாங்க. ஜாக்கிறதை... இதைத் தான் அவருக்கு சொல்லிக் கொடுத்தேன். இதையெல்லாம் அவர் மனதில் வைத்துக் கொண்டு உழைச்சு உழைச்சு முன்னேறியிருக்கார்.
இன்றைக்கு அவர் உட்கார்ந்திருக்கிற இடம், கடவுள் கொடுத்தது. உழைச்சதினால் கடவுள் கொடுத்திருக்கிறார். தமிழ்நாட்டில் தாய்மார்கள் மனதில் பிள்ளையா உட்காந்திருக்கார். இளைஞர்கள் மத்தியில் அண்ணன், தம்பியா உட்கார்ந்திருக்கார். இன்னொரு பெருமையான விஷயம் நான் எங்கே போனாலும் அப்பா என கூப்பிடுறாங்க. ரசிகர்களின் அப்பாவை அப்பா என அவர்கள் கூப்பிட்டதே கிடையாது. என்னைத் தவிர. இவ்வளவு பெருமையைக் கொடுத்த சாதனையாளரை விட்டுவிட்டு எனக்கு எதற்கு இந்த பட்டம். பரவாயில்லை இந்த விருதை கொண்டு போய் அவர்களிடமே கொடுத்துவிடுகிறேன்” என்றார்.