சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இப்படம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி 38 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிவகுமார், கார்த்தி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் படம் குறித்து ரஜினி பேசிய வீடியோ ஒளிபரப்பட்டது. அதில் ரஜினி பேசியதாவது, “ஞானவேல் ராஜாவை பருத்திவீரன் படத்தில் இருந்தே நல்லா தெரியும். அவர் தீவிர சினிமா ரசிகர். பிரம்மாணடமாகவும், வித்தியாசமாகவும் படம் எடுக்க விரும்புபவர். சினிமா குறித்து அக்கு வேறா ஆணி வேறா எல்லா விஷயத்தை பற்றியும் அவருக்குத் தெரியும். அவரிடம் ஒரு வேலையை கொடுத்தால் கட்சிதமாக செய்து முடிப்பார். அதே போல் கங்குவா படத்தை பிரம்மாண்டமாக எடுத்திருப்பது மகிழ்ச்சி. இந்த விழாவில் என்னை கலந்து கொள்ள அழைத்தார்கள். நான் படப்பிடிப்பில் இருப்பதால் வரமுடியாது என இந்த வீடியோவை அனுப்பியிருக்கிறேன்.
சிவாவுடன் அண்ணாத்த படம் பண்ணியிருக்கேன். ஆனால் 25, 30 படம் பண்ண மாதிரி ஒரு உணர்வு. அந்தளவிற்கு நெருக்கம் ஏற்பட்டுவிட்டது. அவரை மாதிரி மனிதர்களை சினிமாவில் பார்ப்பது ரொம்ப கஷ்டம். அவருக்கு குழந்தை மனசு. மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை நல்லா தெரிஞ்சு வைத்திருப்பார். அதனால்தான் அவர் இயக்கிய படங்கள் 99 சதவிகிதம் ஹிட்டானது. அண்ணாத்த படம் பண்ணும் போது கரோனோ இரண்டாம் கட்ட அலை வந்தது. வெளியே எங்கும் ஷூட்டிங் நடத்த முடியாது. அதனால் ஒரு பத்து நாள் ஃபில் சிட்டியில் படப்பிடிப்பு நடத்தினோம். பின்பு ஒரு பாடல் மட்டும் வெளியே எடுத்தோம். மற்ற எல்லா சீனும் ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படமாக்கினோம். சிவாவுடைய உழைப்பை கண்டு பிரம்மித்துவிட்டேன். அவருடன் ஒளிப்பதிவாளர் வெற்றியும் நல்ல நண்பர்கள்.
அப்போது சிவாவிடம் எனக்காக ஒரு பீரியட் படம் பண்ண வேண்டும். அதை வெற்றியுடன் நீங்க இணைந்து பண்ணினால் ரொம்ப நல்லாயிருக்கும் என்றேன். உடனே அவர் இதைப் பற்றி நான் தீவிரமாக யோசிக்கிறேன் என்றார். அதனால் கங்குவா எனக்காக எழுதப்பட்ட கதைதான். இது ஞானவேலுக்கு தெரிந்து கதை ரொம்ப நல்லாயிருக்கு அதனால் சூர்யாவை வைத்து பண்ணலாம் என முடிவெடுத்து விட்டார் என நினைக்கிறேன். இதுக்கப்புறம் எனக்காக சிவா இன்னொரு படம் பண்ணுவார்.
சிவகுமாருடைய ஒழுக்கம், கண்ணியம், நேர்மை, அறிவு யாருக்கும் வராது. அதுமாதிரி ஜெண்டில்மேனை இண்டஸ்ரியில் பார்க்கவே முடியாது. புலிக்கு பிறந்தது பூனையாகுமா. அது போல சிவகுமாரின் எல்லா பண்புகளும் சூர்யாவிடம் இருக்கிறது. கங்குவா பிரம்மாண்ட வெற்றி பெற இறைவனை வேண்டிக்கிறேன்” என்றார்.