உத்தரப் பிரதேசம், அயோத்தியில் நேற்று மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் குடமுழுக்கு நடைபெற்றது. பிரதமர் மோடி ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து நிறுவினார். இந்த நிகழ்வில், இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
அந்த வகையில், ரஜினி தனது மனைவி மற்றும் அண்ணனுடன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது ஒரு வரலாற்று நிகழ்வு. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. ஒவ்வொரு வருடமும் கண்டிப்பாக அயோத்திக்கு வருவேன்” என்றார்.
இதனைத் தொடர்ந்து இன்று சென்னை வந்தடைந்த ரஜினி, விமான நிலையத்தில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் பேசியதாவது, “ரொம்ப நல்ல தரிசனம். ராமர் கோவில் திறந்தவுடனே முதலில் பார்த்த 150, 200 பேரில் நானும் ஒருவன். அதில் பெரிய சந்தோஷம். என்னைப் பொறுத்தவரை இந்த நிகழ்வு ஆன்மீகம் தான். ஒவ்வொருத்தருடைய பார்வையும் ஒவ்வொன்றாக இருக்கும். எல்லாருடைய பார்வையும் ஒன்றாக இருக்கும் என்ற அவசியம் இல்லை. ஒவ்வொருவரின் கருத்தும் அவர்களுடைய சொந்த கருத்து. என்னுடைய கருத்தில் இது ஆன்மீகம்” என்றார்.