ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வேட்டையன்’. இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை(10.10.2024) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி முன்பு நடந்த இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடந்தது. இதில் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
இதில் ரஜினி பேசுகையில் படக்குழுவினர் பற்றி நிறைய விஷயங்கள் பகிர்ந்தார். அப்போது அனிருத் குறித்து பேசுகையில், “மன்னன் பட ஷூட்டிங் போது அனிருத் குழந்தையாக வந்தார். ‘சண்டிராணியே...’ பாட்டுக்காக ஒரு சிம்மாசனம் இருந்தது. அந்த சிம்மாசனத்தில் அனிருத்தை உட்கார வைத்து ஃபோட்டோ எடுத்தேன். இப்போது அவர் மியூசிக்கல் சிம்மாசனத்தில் உட்காந்திருக்கிறார். வெளிநாட்டில் அனிருத் பெயரை சொன்னால் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுவிடுகிறது. அந்த மாதிரி ஒரு வரவேற்பு. இப்போது கூட அமெரிக்காவிற்கு நிகழ்ச்சி நடத்த அவர் சென்றபோது நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் அவருக்கு குளூர் ஜொரம். ஒரு டேப்லட் வாங்கி போட்டுவிட்டு 2 அரை மணிநேரம் தூள் பண்ணினார்.
அதை முடிச்சிட்டு வந்தவுடன் தேவரா படத்துக்கு இசை. இப்படி பிஸியாக வேலை பார்த்தார். உழைக்கிற நேரத்தில் உழைக்கவேண்டும். காற்றுள்ள போதுதான் தூற்றிக் கொள்ள முடியும். அனிருத்திடம் இன்னொரு குணம் இருக்கிறது. ஒரு படத்தை பார்த்துவிட்டு இது நல்லாயிருக்கு நல்லாயில்லை. இது ஓடும் ஓடாது என கரெக்டா சொல்லிவிடுவார். ஒரு ஜோசியக்காரர் போல. அவர் ஓகே சொன்னால் எவ்ளோ பணத்தையும் போட விநியோகஸ்தர்கள் ரெடியாக இருக்கின்றனர். ஆனால் ஹிட்லர் மாதிரி ஒரு விஷயம் கூட வெளியில் வராதபடி பார்த்துப்பார். அவருடன் 8 பேர் இருக்கிறார்கள். அவர்களைத் தாண்டி ஒரு படத்தின் ரிப்போர்ட் வெளியே வராது. அதோடு படத்தை பார்த்து சில மாற்றங்கள் சொல்வார். அப்படித் தான் ஜெயிலர் படத்தில் ஹுக்கும் பாடல் உருவானது. அவர் எனக்கு மகன் மாதிரி. அவருக்கு என் அன்பை எப்படி திருப்பி கொடுப்பேன் எனத் தெரியவில்லை” என்றார்.