Skip to main content

"தரம் தாழ்ந்த அரசியல்... அசிங்கமாக இருக்கிறது" - பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்த ராதிகா

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

radhika about roja bandaru satyanarayana murthy issue

 

ஆந்திர பிரதேச மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கு ஒன்றில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஆளும் கட்சியான ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினருக்கு இடையே தொடர்ந்து கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், நடிகை மற்றும் ஆந்திர சுற்றுலா மற்றும் இளைஞர் நல மேம்பாட்டு துறை அமைச்சரான ரோஜா, சந்திரபாபு நாயுடுவை விமர்சித்து வந்தார்.

 

அதற்கு பதில் தரும் விதமாக, தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்ய நாராயணா, ரோஜாவின் தனிப்பட்ட வாழ்க்கையை இழிவு படுத்தும் விதமாக ஆபாசமான வார்த்தைகளில் பேசியிருந்தார். மேலும் அவர், ரோஜா தவறான படங்களில் நடித்த வீடியோ தன்னிடம் இருப்பதாகவும், சந்திரபாபு நாயுடுவை அவர் விமர்சிப்பதை நிறுத்தாவிட்டால் அந்த வீடியோவை வெளியிடுவதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். 

 

இதற்கு ஆந்திர மகளிர் ஆணையம் சார்பில் கண்டனம் தெரிவித்து அவருக்கு எதிராக டி.ஜி.பி.க்கு புகார் அளித்தனர். இதனையடுத்து, குண்டூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்ய நாராயணாவை கடந்த 3ஆம் தேதி கைது செய்தனர். இதனைதொடர்ந்து,  திருப்பதியில் செய்தியாளர்களைச் சந்தித ரோஜா கண்ணீர் மல்க, "பண்டாரு சத்ய நாராயணாவின் கருத்து என்னை மிகவும் காயப்படுத்தி உள்ளது. நான் தவறான படங்களில் நடித்ததாக என்னை பற்றி தவறாக சொல்கிறார்கள். என்னை பற்றி தவறாக பேசுவதற்கு முன் அவர்கள் வீட்டில் உள்ள பெண்களை நினைத்து பார்க்க வேண்டும். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தால் இவ்வாறு பேசுவார்களா?" என பேசியிருந்தார். 

 

இந்த நிலையில் ரோஜா மீதான விமர்சனம் குறித்து ராதிகா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள வீடியோவில், "கடந்த சில நாட்களாக தரம் தாழ்ந்த அரசியலை பார்த்து வருகிறேன். அது மிகவும் வருத்தமளிக்கிறது. மேலும் அது காயப்படுத்துகிறது. கோபமும் வருகிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது" என குறிப்பிட்டு இந்தியாவில் பெண்களின் வளர்ச்சியை பற்றி பேசினார். 

 

தொடர்ந்து பேசிய அவர், "கவனம் பெறுவதற்காக பெண்களை தரம் தாழ்ந்து பேசும் அரசியல், ஒரு மதிப்புமிக்க மனிதரிடமிருந்து மதிப்புமிக்க கட்சியிலிருந்து வருவது அசிங்கமாக உள்ளது. இந்தியாவில் பெண்களை பாரத மாதாவாக பார்க்கிறோம். ஆனால் பெண்களுக்கு இப்படி தான் மரியாதையை கொடுப்பீர்களா. இந்த அரசியலை பார்க்கும் போது அசிங்கமாக உள்ளது. அவரது கருத்துக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும். நான் ரோஜாவின் பக்கம் நிற்பேன். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு, பெண்களுக்கு எதிரான இதுபோன்ற பேச்சுக்கு நாடாளுமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டார். 

 

 


 

சார்ந்த செய்திகள்