கரோனா பாதிப்பால் தேசிய ஊரடங்கு கடந்த இரண்டு மாதங்களாக அமலில் உள்ளது. அதற்கு முன்பிலிருந்து திரையரங்கம், மால் போன்ற பொழுதுபோக்கு இடங்கள் மூடப்பட்டுவிட்டன. தற்போது லாக்டவுன் எடுக்கப்பட்டாலும், பொழுதுபோக்கு இடங்கள் மீண்டும் திறப்பது எப்போது என்பது பலருக்கும் கேள்வியாகவே உள்ளது.
பாலிவுட்டில் தயார் நிலையிலுள்ள பெரும் பட்ஜெட் படங்களை ஓ.டி.டி. பிளட்ஃபார்மில் வெளியிட தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகிறன. இந்நிலையில் ஆயுஷ்மான் குரானா மற்றும் அமிதாப் பச்சனின் நடிப்பில் சுஜித் சிர்கார் இயக்கத்தில் உருவாகியுள்ள குலாபோ சிதாபோ படம் அமேசான் ப்ரைமில் ஜூன் 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இந்தியாவின் மிகப்பெரிய மல்டிப்ளெக்ஸ் உரிமையாளர்களில் ஒரு நிறுவனமான பி.வி.ஆர். அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்துப் பேசிய பி.வி.ஆர். பிக்சர்ஸின் தலைமைச் செயல் அதிகாரி கமல் கியான்சந்தானி, "சில தயாரிப்பாளர்கள் நேரடியாக ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியிடுவது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் ஸ்ட்ரீமிங் தளங்களில் திரைப்படங்கள் வெளியாவது இது முதல் முறை அல்ல. கடந்த பல வருடங்களாகவே திரையரங்க வெளியீடு, வளர்ந்து வரும் புதிய தளங்களால் தொடர்ந்து போட்டியைச் சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறது.
தொடர்ந்து சினிமா ரசிகர்களின் ஆதரவையும் அன்பையும் பெற்று வருகிறது. திரையரங்குகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள, அதற்கு ஏற்றவாறு தங்கள் திரைப்படஙகளின் வெளியீட்டை ஒத்திவைத்துள்ள அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நாங்கள் நன்றி கூற விரும்புகிறோம்" என்றார்.