தே.மு.தி.க. தலைவர், முன்னாள் எதிர்கட்சித் தலைவர், திரைப்பட நடிகர் என பண்முகத் திறமை கொண்ட மனிதராக வலம் வந்தவர் விஜயகாந்த். சினிமாவில் இவர் ஆற்றிய பங்கு பெரிதாக பார்க்கப்படும் நிலையில் அவருக்கு பத்ப பூஷன் விருது வழங்கி கௌரவித்தது மத்திய அரசு. இதைத் தாண்டி திரை பிரபலங்களும் அவரை கௌரவிக்கும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார்கள். விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் வெளியான தி கோட் படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் அவரது முகத்தை பயன்படுத்தி நடிக்கவைத்திருந்தனர்.
இதையடுத்து சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படத்தில் விஜயகாந்தின் பாடல்கள், ரெஃபரன்ஸூகள் என பயன்படுத்தி இருந்தனர். குறிப்பாக இந்த படத்தில் நடித்த அட்டக்கத்தி தினேஷ் விஜயகாந்த் ரசிகராக நடித்திருப்பதால் முக்கியமான இடங்களில் விஜயகாந்தின் ‘நீ பொட்டு வெச்ச தங்க குடம்...’ பாடல் இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்கியிருக்க அட்டக்கத்தி தினேஷுடன் இனைந்து ஹரிஷ் கல்யாணும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சஞ்சனா, சுவாசிகா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களோடு தேவதர்ஷினி, பால சரவணன், டி.எஸ்.கே. உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகியிருந்தது. இப்படக்குழு சமீபத்தில் தே.மு.தி.க. அலுவலகத்தில் இருக்கும் விஜயகாந்தின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் லப்பர் பந்து படத்தை பார்த்துள்ளனர். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது விஜயகாந்த் காட்சிகள் குறித்து பேசிய பிரேமலதா, “ஒவ்வொரு காட்சியிலும் கேப்டனின் தாக்கம் நிறைய இருக்கிறது. இந்தப் படத்தை தே.மு.தி.க. தொண்டர்கள் எப்படி கொண்டாடுவார்களோ அது போல அனைவரும் கொண்டாடுவார்கள். படத்தில் வரும் ‘ நீ பொட்டு வச்ச தங்க குடம்’ பாடல் புல்லரிக்க வைக்கும் ஒரு பாடல். எங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஒவ்வொரு ஊரிலும் நாங்கள் பேசி முடித்த பிறகு இந்த பாடலைதான் போடுவார்கள். கேப்டன் வரும் போதும் இந்தப் பாட்டுதான் போடுவார்கள். எங்கள் கட்சியினுடைய மிக முக்கியமான பாடல் இது. அதோடு பட்டி தொட்டி எல்லாம் கொண்டாடிய ஒரு பாடல். அதை சரியாக இயக்குநர் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். இதே போல் என் மகன் நடிக்கும் சண்முக பாண்டியன் படத்திலும் கேப்டன் பாடல்களை எதிர்பார்க்கலாம். கேப்டன் எங்கள் குடும்ப சொத்து இல்லை. மக்களுக்கான சொத்து. அவரது பாடல்கள், நினைவுகள் என அனைத்தையும் கொண்டாடுவதை நாங்கள் வரவேற்கிறோம்” என்கிறார்.