பிரசாந்த் நடிப்பில் தற்போது வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘அந்தகன்’. இப்படம் இந்தியில் வெளியாகி தேசிய விருது பெற்ற ‘அந்தாதூன்’ திரைப்படத்தின் ரீமேக்காகும். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்கி, தயாரிக்க கலைப்புலி எஸ்.தாணு வழங்குகிறார். இப்படத்தில் சிம்ரன், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, ஊர்வசி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 9ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி தனியார் கல்லூரியில் புரமோஷன் பணிகளில் பிரசாந்த் மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். அதன் பிறகு இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பிரசாந்த்திடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் சினிமாவில் ஏன் இடைவெளி வந்தது? என்ற கேள்விக்கு, அவர், “நானாக ஏற்படுத்தியது அல்ல, அந்தகன் படம் பண்ணியிருக்கேன், அதில் நிறைய கேரக்டர் இருக்கிறது. அந்த கேரக்டருக்கு நல்ல ஆர்ட்டிஸ்ட் தேவைப்பட்டது. அவர்கள் உங்களுக்கும் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் டெக்னீசியன்களும் பெஸ்டாக யூஸ்பண்ணியிருக்கேன். மற்ற மொழிகளில் இந்த படம் நேரடியாக ஓ.டி.டி.-யில் ரிலீஸானது. நாங்க தியேட்டரில் ரிலீஸ் செய்ய வெயிட் பண்ணோம். அதுக்கு எடுத்துக் கொண்ட டைம்தான் இது” என்றார்.
அதன் பின்பு பிரசாந்த் அண்மையில் தலைக்கவசம் அணியாமல் டூ விலரில் சென்று அபராதம் விதிக்கப்பட்டது. அதைப் பற்றிய கேள்விக்கு அவர், “சமீப காலமாக ஹெல்மட் பாதுகாப்பு பற்றி நிறைய விழிப்புணர்வு பண்ணியிருக்கேன். தமிழ்நாடு முழுக்க நிறைய ஹெல்மட் இலவசமாக கொடுத்திருக்கேன். நாகர்கோவிலில் ஆரம்பிச்சு திருச்சி என நிறைய இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறேன். தயவு செய்து ஹெல்மட் போட்டு பாதுகாப்பாக நிதானமாக ஓட்டுங்கன்னு நான் தான் சொல்லியிருக்கேன். இப்போது இந்த சம்பவத்தின் மூலமாக எனக்கு அதைப்பற்றிப் பேச இன்னொரு பிளாட்பார்ம் கிடைச்சுருக்கு. தயவு செய்து ஹெல்மட் போட்டு ஓட்டுங்க உங்க குடும்பத்துக்கு நல்லது” என்று பதிலளித்தார்.
இதையடுத்து விஜய்யின் அரசியல் மற்றும் சினிமா வாழ்க்கை குறித்த கேள்விக்கு, “அவருக்கு எண்டு இருக்காதுங்க. அவர் ஒரு இலக்கை நோக்கி வேற தளத்தில் வேலை செய்கிறார். அவரின் நலன் விரும்பியாகவும் சகோதரனாகவும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். அவர் அரசியல் வந்தது நல்ல விஷயம். யார் மக்களுக்கு நல்லது பண்ணாலும் நான் சப்போர்ட் செய்வேன். அது யாராக இருந்தாலும்” எனப் பதிலளித்தார். மேலும் விஜய் நல்லது செய்துள்ளாரா? என்ற கேள்விக்கு, “நீங்கதான் அதைச் சொல்ல வேண்டும், அது மக்கள் தீர்ப்பு” என்றார்.
அதனைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த `தமிழ் ராக்கர்ஸ்' அட்மின் ஸ்டீபன் ராஜ் கைது குறித்த கேள்விக்கு, “ஒரு மனுஷனுக்கு கேன்சர் வரும்போது கஷ்டமாக இருக்கும், அதுக்கு என்ன மெடிசன் தெரியாமல் சுத்திட்டு இருப்போம். அந்த நோய் எப்படி வருதுன்னு கண்டுபுடுச்சு அதை சரி செய்வதில் சந்தோஷம். அவங்க ஒரு இண்டஸ்ட்ரியவே அழிக்க பாக்குறாங்க. தயாரிப்பாளர் காசு, பணம், லாபம் எல்லாம் ஒரே நைட்ல காணாமல் போகிறது. இயக்குநரும், நடிகரும் பட்ட கஷ்டங்கள் இல்லீகலாக வெளியே வரும்போது எல்லோருக்குமே கஷ்டம் ஏற்படுகிறது. அதனால் இது நடந்தது சந்தோஷமான செய்தி. மக்களும் இல்லீகலாக ஒரு படம் வரும்போது பார்க்காதீங்க எனத் தயவாகக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். மேலும் நீங்களும் உங்க அப்பா தியாகராஜனும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருப்பதாகச் சொல்கிறார்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, “அப்டீங்களா சரி, அது என்னனு விசாரிக்கனும்” என்று பதிலளித்தார்.