சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள படம் 'பதான்'. இப்படத்தின் முதல் பாடல் 'பேஷரம் ரங்' அண்மையில் வெளியாகிய நிலையில் படு கவர்ச்சியாக உடை அணிந்து தீபிகா படுகோனே இப்பாடலில் நடனமாடியிருக்கிறார். இப்பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் ஒரு காட்சியில் தீபிகா படுகோனே அணிந்திருக்கும் காவி நிற உடை இப்போது சர்ச்சையைக் கிளப்பி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதில், காவி நிற உடையை மிகவும் கவர்ச்சியான முறையில் தீபிகா படுகோனே அணிந்திருப்பதாக இந்துத்வா ஆதரவாளர்களால் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமூக வலைத்தளத்திலும் #BoycottPathaan #BoycottBollywood என்ற ஹேஷ்டேக்குகளை வைரலாக்கி வருகிறார்கள். அந்த வகையில் மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் மற்றும் பாஜக-வை சார்ந்த நரோட்டம் மிஸ்ரா, பாடலில் உள்ள காட்சிகள் மற்றும் உடைகள் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் மத்தியப் பிரதேசத்தில் பதான் படத்தை வெளியிட தயாரிப்பாளர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் இந்தூரில் ஷாருக்கானின் உருவ பொம்மையை எரித்து 'பதான்' படத்தைத் தடை செய்ய வேண்டும் என சிலர் போராடி வருகின்றனர். இந்த சர்ச்சை தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில், "இந்தூரில் ஷாருக்கானின் உருவ பொம்மையை போராட்டக்காரர்கள் எரிகின்றனர். பதான் படத்தைத் தடை செய்ய வேண்டி அவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். காவி உடை அணிந்து பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குகிறார்கள்; சில எம்.எல்.ஏக்கள் வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்; காவி உடை அணிந்த சாமியார் சிறுமிகளை பாலியலுக்கு உண்டாக்குகிறார். அது பரவாயில்லை, ஒரு நடிகை படத்தில் காவி உடை அணிந்து வருவது தவறா. " எனக் கடுமையாகப் பேசியுள்ளார். அடுத்த மாதம் 25ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.