இயக்குநர் எச். வினோத் - அஜித் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி வரும் படம் 'ஏகே 61'. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் அஜித் நடித்த வலிமை படம் உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியானது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து வெளியான அஜித் படம் என்பதால், அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் கட்டவுட்டிற்கு பால் ஊற்றியும் திரையரங்கில் வலிமையை கொண்டாடி தீர்த்தனர். அந்த நேரத்தில் கோவை, காந்திபுரம் 100 அடி சாலையில் வலிமை படம் ஓடிக்கொண்டிருந்த கங்கா யமுனா திரையரங்கு மீது இருசக்கரத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பித்துச் சென்றனர். இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கோவை காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பித்துச் சென்றவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் இச்சம்பவத்திற்கு காரணமான சிவா என்பவரை 5 மாதம் கழித்து காட்டூர் போலீசார் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர். சிவா சென்னை வடபழனியில் தங்கி கட்டிட வேலை பார்த்து வருவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சென்னை விரைந்த காட்டூர் போலீஸ் வடபழனி போலீசாரின் உதவியுடன் சிவாவை கைது செய்து கோவைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.