ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் நடிப்பில், ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘உஸ்தாத் பகத் சிங்’. ஸ்ரீலீலா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மூலம் நவீன் ஏர்னேனி மற்றும் ரவி ஷங்கர் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தி்ன் டீசர் கடந்த 19ஆம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதே நேரத்தில் இந்த டீசர் மூலம் சில சர்ச்சைகளும் எழுந்துள்ளது.
அதாவது, ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை நடைபெறவுள்ள மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடக்கவுள்ளது. மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த தேர்தலில், அரசியல் கட்சித் தலைவரான பவன் கல்யாண், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் இறங்கவுள்ளார்.
இந்த நிலையில், பவன் கல்யாண் நடித்திருக்கும் ‘உஸ்தாத் பகத் சிங்’ டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசரில், ஒரு காட்சியில் ‘டீ கிளாஸ் ஒன்று குளோசப்பில் காட்டப்படுவது போல் படமாக்கப்பட்டுள்ளது. பவன் கல்யாணி ஜனசேனா கட்சியின் சின்னமான டீ கிளாஸை டீசரில் காட்டியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, பவன் கல்யாண் தனது கட்சி சின்னத்தை டீசரில் காட்டியிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திரா தலைமைத் தேர்தல் அதிகாரி முகேஷ் குமார், “நான் டீசரை பார்க்கவில்லை. எனவே, நான் அதில் கருத்து கூற முடியாது. ஆனால் விளம்பரத்திற்காக டீ கிளாஸை உயர்த்தி காட்டினால் அது அரசியல் விளம்பரமாகவே கருதப்படும். இப்படி அரசியல் விளம்பரங்கள் செய்யலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. இருப்பினும், அத்தகைய விளம்பரங்களுக்கு முன் அனுமதி அவசியம். அரசியல் விளம்பரம் என்றால் அந்த படக்குழுவினருக்கு நோட்டீஸ் கொடுப்போம். அவர்கள் முன்சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.