தமிழ் திரைத் துறையில் சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரால் "கலைஞர் கலைத்துறை வித்தகர்" என்ற பெயரில் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். மேலும் இந்த விருது வழங்கும் குழுவிற்கு எஸ்.பி முத்துராமன் தலைவராகவும், நாசர் மற்றும் கரு . பழனியப்பன் ஆகிய இருவரையும் உறுப்பினராக கொண்ட தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விருது வழங்குபர்களை தேர்தெடுக்கும் குழுவில் தன்னையும் உறுப்பினராக சேர்த்ததற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், "தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, தாங்கள் ஆற்றிவரும் நற்பணிகளுக்கு தமிழக மக்களின் சார்பாக நன்றியும் வாழ்த்துக்களும். பாடிக்கொண்டிருந்த தமிழ்ச்சினிமா பேசவாரம்பிப்பதற்கு அதி முக்கிய காரணமாக, இலக்கியத்திற்கொப்ப வசனங்களை திரையில் ஒலிக்க, சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் செல்ல, அதன்மூலம் மக்களிடையே ஒரு பேரெழிச்சியை கொண்டுவரக்காரணமாய் இருந்த வித்து, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரால் "கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது" மற்றும் பத்து இலட்சத்துக்கான பொன்முடிப்பும் வழங்கப்படுமென்பதை அறிவித்த தங்களுக்கு நன்றிகள் பல கோடி கலைஞர்களுக்கு பொருள் அல்ல ப்ரதானம். சமூகத்தில் அங்கீகாரமும் பாராட்டும் தான். "கலைமாமணி" என்ற விருதமைத்த கலைஞரின் பெயரால் இருக்கும் இவ்விருது பெற்றிடும் பெரும் கலைஞர்கள் மனமகிழ்வார்கள். அத்தகைய விருதினை பெறுவதற்கான சான்றோரை தேர்ந்தெடுக்க ஒரு குழு அமைத்தமைக்கும், அக்குழுவில் ஒருவனாக இந்த எளிய நடிகனையும் நியமித்தமைக்கு நன்றி. கொடுக்கப்பட்ட இப்பணியினை முத்தமிழறிஞர் ஆசியோடு செவ்வனே செய்வேன் எனவும் உறுதி கூறுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த குழுவால் பரிந்துரைக்கப்பட்டு விருது பெரும் நபர்களுக்கு ரூ.10 லட்சம் ரொக்கமாகவும் வழங்கப்படும். இவ்விருது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினால் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டை தொடர்ந்து வரும் ஆண்டுகளில் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.