இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் 1954ஆம் ஆண்டிலிருந்து தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் 1984ஆம் ஆண்டிலிருந்து சிறந்த அறிமுக படத்துக்கான இந்திரா காந்தி விருதும், 1965ஆம் ஆண்டிலிருந்து தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்தாண்டு நடக்கவுள்ள 70வது தேசிய விருதுகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசுத்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. சிறந்த அறிமுக படத்துக்கான இந்திரா காந்தி விருது, சிறந்த அறிமுக திரைப்பட இயக்குநருக்கான விருது என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவ்விருது வாங்கும் இயக்குநருக்கு பதக்கமும், ரூ.3 லட்சம் பரிசும் வழங்கப்படவுள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்துக்கான நர்கிஸ் தத் விருது, தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்விருது பெறும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இருவருக்கும் பதக்கமும், தலா ரூ.2 லட்சம் பரிசும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தாதாசாஹேப் பால்கே விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சிறந்த படம், முதல் படம், முழுமையான பொழுதுபோக்கு வழங்கும் படம், இயக்கம் மற்றும் குழந்தைகள் படம் வகையில் வழங்கப்படும் சுவர்ண கமல் விருதின் பரிசுத்தொகை ரூ.3 லட்சமாகவும், தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழலை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம், நடிப்பு பிரிவுகள், சிறந்த திரைக்கதை, இசை மற்றும் பிற பிரிவுகளின் அடிப்படையில் வழங்கப்படும் ரஜத் கமல் விருதின் பரிசுத்தொகை ரூ.2 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சிறந்த அனிமேஷன் படம், சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் படம் ஆகியவை 'சிறந்த ஏ.வி.ஜி.சி. படம்' என்ற ஒரே விருதாக வழங்கப்படுகிறது. சிறந்த ஒலிப்பதிவுக்கான விருது. சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதாக மாற்றப்பட்டு பரிசுத்தொகை 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறந்த இசை இயக்கத்துக்கான விருது சிறந்த பின்னணி இசை விருதாக மாற்றப்பட்டுள்ளது. சிறப்பு ஜூரி விருது நீக்கப்படுகிறது. 'சிறந்த குடும்ப படம்' என்ற விருது நீக்கப்பட்டு, 'சிறந்த திரைக்கதை' விருது அறிமுகப்படுத்தப்படுகிறது.