பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரின் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் தயாராகியுள்ள டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டுள்ளார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் வருகிற 14 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசியது படக்குழு.
பத்திரிகையாளர் சந்திப்பின்போது நக்கீரன் ஆசிரியர் வீரப்பனைப் பற்றி படம் எடுப்பதற்காக தன்னை தொடர்பு கொண்டவர்களைப் பற்றி ஒரு விசயத்தை பகிர்ந்து கொண்டார். அதாவது, ‘வீரப்பனை பற்றி படம் எடுப்பதற்காக பலர் அவரை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் இயக்குநர் பாலுமகேந்திரா. அவர் இறப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு நக்கீரன் ஆசிரியரை நேரில் சந்தித்து, வீரப்பனை பற்றி படம் எடுக்கப் போவதாகவும், தாங்கள் சேகரித்து வைத்திருப்பதை தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். நாளைக்கு சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டு, மறுநாள் காலை ஃபோனில் அழைத்து மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதற்காக இயக்குநர் பாலா நக்கீரன் ஆசிரியரை தொடர்பு கொண்டு, “என் குருநாதர் கேட்டே நீங்க தரமாட்டேன்னு சொல்லிட்டீங்களா” என்றிருக்கிறார். நேர்ல வாங்கண்ணே பேசுவோம் என்று நக்கீரன் ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.