தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்பு 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிவதாக அறிவித்தார். அதன்படி தற்போது இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.
இந்த சூழலில் தெலங்கானா சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா, சமந்தா விவகாரத்துக்கு தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகன் கே.டி.ராமாராவ்தான் காரணம் என சமீபத்திய பேட்டியில் பேசியிருந்தார். இது அரசியல் வட்டாரத்திலும் சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை கிளப்பியது. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரபல நடிகர் மற்றும் நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனா, “உங்கள் எதிரிகளை விமர்சிப்பதற்காக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையை பயன்படுத்தாதீர்கள். உங்கள் கருத்துக்களை உடனடியாக திரும்ப பெறுங்கள்” என கண்டனத்தை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நாகர்ஜுனாவின் மனைவி நடிகை அமலா, எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது எக்ஸ் பக்கம் வாயிலாக கேட்டுக் கொண்டார்.
இவர்களைத் தொடர்ந்து நாக சைத்தன்யா, சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜூன், நானி, என பல்வேறு தெலுங்கு திரை பிரபலங்களும் தங்களது கண்டனத்தை எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டனர். மேலும் முன்னாள் அமைச்சர் கே.டி.ஆர் கொண்ட சுரேகாவுக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பினார். அதோடு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சமந்தா இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், எனது விவகாரத்து பரஸ்பர சம்மதத்துடன் நடந்தது என்றும் அதில் எந்த அரசியல் சதியும் இல்லைஎன்றும் தெளிவுபடுத்தியிருந்தார். இதையடுத்து அமைச்சர் கொண்டா சுரேகா, தனது கருத்தை வாபஸ் பெறுவதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
இந்த நிலையில் நாகர்ஜுனா அமைச்சர் கொண்டா சுரேகா மீது நாம்பள்ளி நீதிமன்றத்தில் கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தனது குடும்ப உறுப்பினர்களின் கௌரவம் மற்றும் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் அமைச்சர் கொண்டா சுரேகா அவதூறு கருத்துக்களை கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.