மூபி எனும் தளத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கிட்டத்தட்ட நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்று திரைப்படங்களைத் தரும் தளம்தான். ஆனால் ஒரு வித்தியாசம். அந்தத் தளங்களில் ஏகப்பட்ட படங்கள் கொட்டிக் கிடக்கும். நாம் நமக்கு விருப்பமானவற்றை பார்த்துக் கொள்ளலாம். ஆனால் மூபியில் அப்படி கிடையாது. தினமும் ஒரு படம் மட்டுமே பதிவேற்றப்படும். அதுவும் மிகக் கூர்மையாக அலசப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தரமான படமாக இருக்கும். அந்த படத்திற்கு 30 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி. அதாவது 30 நாட்களுக்குள் அந்த படத்தை பார்த்துவிட வேண்டும். தவறினால் அது எக்ஸ்பயர் ஆகிவிடும். இப்படி ஒரு நாளுக்கு ஒரு படம் என வருடத்திற்கு 365 படங்கள் பதிவேற்றப்படும். தளத்திற்குள் நீங்கள் சென்றால் அதற்கு 29 நாட்களுக்கு முன் பதிவேற்றிய படம் உட்பட கிட்டத்தட்ட 30 படங்கள் மட்டுமே இருக்கும். இது அவர்களே தேர்ந்தெடுத்து நமக்குத் தரும் திரைப்படங்கள். அந்த படத்திற்கான காலக்கெடு முடிவதற்குள் அதை பார்த்துவிட வேண்டும். இயக்குனர்கள், கருப்பொருட்கள், உருவாக்கம், தன்மை என வெவ்வேறு தலைப்புகளின் கீழே இந்த படங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான சினிமா காதலர்களின் விருப்பமான தளமாக இருக்கும் மூபி சமீபத்தில் மூன்று விஷயங்களை அறிமுகப்படுத்தியது.
ஒன்று மூபி இந்தியா. இதுவரை சிறந்த உலகத் திரைப்படங்களை மட்டுமே பதிவேற்றி வந்த மூபி, சிறந்த இந்தியத் திரைப்படங்களையும் பதிவேற்றத் துவங்கியிருக்கிறது. தளத்திற்குள்ளேயே மூபி இந்தியா, மூபி வேர்ல்ட் என்று இரண்டு பிரிவுகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டிலும் தினம் தினம் ஒரு படம் பதிவேற்றப்படுகிறது. இன்னொன்று மூபி கோ. இந்தியாவில் பி.வி.ஆர் திரையரங்குகளுடன் கைகோர்த்து இந்த சேவையைத் தருகிறது மூபி. இதைப் பயன்படுத்தி வாரம் ஒரு புதிய படத்தை உங்கள் அருகில் உள்ள பி.வி.ஆர் திரையரங்கில் நீங்கள் இலவசமாக பார்த்துக் கொள்ளலாம். ஆனால் இந்த படங்களை முடிவு செய்வதும் மூபி தான். மூபியை பொறுத்தவரை தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு இல்லை. பார்த்து மகிழலாம் அவ்வளவே. மூன்றாவது, மாதத்திற்கு 500 ரூபாய் கொடுத்து பெறக்கூடிய சப்ஸ்க்ரிப்ஷனை சலுகை விலையில் மூன்று மாதத்திற்கு 199 ரூபாய் செலுத்தி பெறலாம். இந்த மூன்று திட்டங்களின் மூலம் திரைப்படப் பிரியர்களுக்கு திகட்ட திகட்ட ஆச்சர்யங்களை வழங்கியுள்ளது மூபி. குறிப்பாக இந்த மூபி கோ மூலம் பி.வி.ஆர் தியேட்டர்களில் வாரம் ஒரு புது படத்தை இலவசமாக பார்க்க முடிகிற திட்டம் நிச்சயம் ஒரு ஆச்சர்யம் தான். இப்படி வாரம் ஒன்று என மூபி தேர்ந்தெடுத்துக் கொடுத்து, பி.வி.ஆரில் பார்க்க முடிகிற திரைப்படங்களை குறித்த அறிமுகமும் அலசலும் தான் இந்த மூபி மூவி ஆஃப் தி வீக்!
இந்த வாரத்திற்கான திரைப்படம் Bombshell. உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். Fox News நிறுவனத்தைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஒரு பெரும் செய்தி சாம்ராஜ்யத்தையே கட்டமைத்த நிறுவனம். அந்த நிறுவனத்தை சி.இ.ஓ ரோஜர் அய்ல்ஸ், அங்கே பணிபுரிந்த பெண்களிடம் செய்த பாலியல் சீண்டல்களுக்காக வேலையிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். Fox நிறுவனத்தில் நடந்த இந்த பாலியல் சீண்டல்கள், அது எப்படி யாரால் புகாராக மாற்றப்பட்டது, அதற்கு இருந்த ஆதரவும் எதிர்ப்பும் என்ன என்பதில் துவங்கி ரோஜரின் பணிநீக்கம் வரையிலான சம்பவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது Bombshell.
Fox செய்தி சானலின் செய்தி வாசிப்பாளர் ஒருவர் வக்கீல்களுடன் தனக்கு அலுவலகத்தில் நடக்கும் பாலியல் சீண்டல்களைக் குறித்து பேசும் காட்சியுடன் துவங்குகிறது படம். முதல் காட்சியிலேயே களத்திற்குள் செல்லும் படம், தொடர்ந்து Fox செய்தி நிறுவனத்தில் நடக்கும் பாலியல் சீண்டல்களை காட்சிப்படுத்துகிறது. இது எதையும் ரோஜர் சீரியஸாக செய்வதில்லை. நைச்சியமாக, நகைச்சுவையாக பேசும் போக்கிலேயே இதை மேற்கொள்கிறார். பெண்களின் கால்கள் தெரியவேண்டும் என்று நினைப்பது, 24 மணி நேரமும் மக்களை டிவி பார்க்க வைக்க அதையே மூலதனமாக கருதுவது, அதற்காகவே கேமிரா ஆங்கிள் வைப்பது, அந்த ஆங்கிளையே காட்ட சொல்வது என ஒவ்வொரு காட்சியும் Fox தொலைக்காட்சிக்குப் பின்னால் நடந்த அவலங்களை பேசுகின்றன. குறிப்பாக டிவியில் ஆங்கராக விரும்பும் மார்கட் ராபியிடம் ரோஜர் நடத்தும் அந்த இன்டர்வியு காட்சி மிக கனமான ஒன்று.
பூனைக்கு யார் மணி கட்டுவது என்கிற நிலையில் ஒரு பெண் செய்தி வாசிப்பாளர் ரோஜருக்கு எதிராக பாலியல் புகார் கொடுக்கிறார். விஷயம் தீ போல பரவுகிறது. Fox நிறுவனரின் குடும்பம் ரோஜரைப் பற்றி விசாரிக்க ஒரு கமிட்டியை போடுகிறது. Fox தொலைக்காட்சியில் உடனே ரோஜருக்கு ஆதரவான அலை ஒன்று உருவாக்கப்படுகிறது. அவரது நல்ல குணங்கள் பரப்பப்படுகின்றன. ஆனால் அந்த சேனலின் இன்னொரு நட்சத்திர செய்தி வாசிப்பாளர் மட்டும் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்கிறார். அவரது மௌனம் பலரது கவனத்தை உறுத்த, அவரை தாஜா செய்யும் வேலைகள் ஆரம்பிக்கின்றன. ஒரு கட்டத்தில் ரோஜரினால் பாலியல் சீண்டலுக்கு உள்ளான வேறு சில பெண்கள் கமிட்டியில் ஆஜராகி உண்மையை சொல்கின்றனர். இதைத் தொடர்ந்து மனம் மாறும் அந்த நட்சத்திர செய்தி வாசிப்பாளரும் ரோஜர் மேல் பாலியல் புகார் கூறுகிறார். அதோடு நிற்காமல் அலுவலகத்தில் அவரால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களிடம் பேசுகிறார். முடிவில் 23 பெண்கள் ரோஜருக்கு எதிராக சாட்சி கூற, ரோஜர் Fox செய்தி நிறுவனத்தின் சி.இ.ஓ பதவியில் இருந்து தூக்கியெறியப் படுகிறார்.
மிகக் கனமான ஒரு கதையை, அதன் தன்மைக்கேற்ப நுணுக்கமாக உருவாக்கியிருக்கிறார்கள். ரோஜர் பெண்களை வசியம் செய்யும் விதம், அந்த பெண்களின் இயலாமை, அவர்களின் சூழல், புகார், அதைத் தொடர்ந்து அலுவலகத்தில் நடக்கும் உள்ளடி வேலைகள், ரோஜரைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்தும் சில பெண்களே அவர் பக்கம் நிற்பது, பின் திடீரென மாறும் சூழல் என படம் ஒவ்வொரு பரிமாணத்திலும் அதன் தீவிரத்தன்மையை இழக்காமல் பயணிக்கிறது. இதற்கு தேர்ந்தெடுத்த நடிகர்களின் பங்கும் மிக முக்கியமானதொரு காரணம். அப்படியொரு ஸ்திரத் தன்மையை அவர்கள் படத்திற்கு அளித்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றிய இன்னொரு ஆச்சர்யமான விஷயம், ரோஜர் இறந்த அடுத்த சில மாதங்களிலேயே இப்படியொரு படம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்று அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் படத்திற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. இத்தனைக்கும் ரோஜர் அமெரிக்காவின் பல ரிபப்ளிக்கன் பிரதமர்களுக்கு ஆலோசகராக இருந்தவர். ட்ரம்ப் வரை. ஆனாலும் திரைப்படம் எந்தவொரு தடையும் இன்றி உருவாகி வெளியாகிறது. ஒரே ஒரு வார்த்தை விமர்சனம் வைத்தால் கூட பொங்கி எழுந்து திரைப்படத்திற்கு தடை கேட்டுப் போராடி, அந்த காட்சியை நீக்க வைக்கும் இந்தியாவில் இருந்து இப்படத்தை பார்க்கையில், ஹாலிவுட் படங்களின் இந்த ஜனநாயகத் தன்மை பெரும் வியப்பைத் தருகிறது. என்றாவது ஒருநாள் இந்தியத் திரைப்படங்களுக்கும் அந்த சுதந்திரம் கிடைக்கும்போது, நம்மிடம் இப்போது இருக்கும் கதைப் பஞ்சம் இருக்காது. சொல்லப் போனால் இதுபோன்ற கதைகளுக்கு இந்தியாவில் பஞ்சமே இருக்காது! இத்தனை அரசியல் தொடர்புகள் உள்ளவருக்கு இந்தியாவில் இந்த முடிவு வந்திடுமா என்று கேட்டீர்களானால் வரவேண்டும், வரவைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு பதில் இல்லை.