
ஹாலிவுட்டின் ‘மிஷன்: இம்பாசிபிள்’ பட பாகங்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. குறிப்பாக சண்டை காட்சிகள் ஸ்டண்ட் காட்சிகள் உள்ளிட்டவை ஆக்ஷன் ஜானர் ரசிகர்களுக்கு விருந்தாக அமைகிறது. இதுவரை ‘மிஷன்: இம்பாசிபிள்’ பட தொடர்களில் ஏழு பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்த பாகமான எட்டாவது பாடம் ‘மிஷன்: இம்பாசிபிள் தி பைனல் ரெகனிங்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது.
படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. வழக்கம் போல் டாம் குரூஸின் டூப் இல்லாத ஸ்டண்ட் காட்சிகள் ரசிகர்களை வியக்கவைத்தது. குறிப்பாக சமீபத்தில் வெளியான 8000 அடி உயரம் வரை ஏரோபிளேனில் டாம் குரூஸ் பறக்கும் காட்சி இணையத்தில் வைரலானது. இப்படம் அடுத்த மாதம் நடக்கவுள்ள உலக புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் மே 14ஆம் தேதி ப்ரீமியர் செய்யப்படுகிறது. பின்பு மே 23ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.
இந்த நிலையில் இப்படம் இந்தியாவில் முன்கூட்டியே வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது. அதாவது உலகளவில் வெளியாகும் நாளுக்கு 7 நாள் முன்பாக இப்படம் ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இப்படத்தை முந்தைய பாகத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்யூரியே இயக்கியுள்ளார். பாராமௌண்ட் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. மற்ற நாடுகளை விட முன்கூட்டியே இந்தியாவில் வெளியாகவுள்ளதால் இந்திய ஹாலிவுட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.