விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசரில் 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்குக் கடத்தப்படுவதாக காட்சி இடம்பெற்றது. மத வெறுப்பைத் தூண்டும் வகையில் படம் இருப்பதாகப் பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
இப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி கேரளா மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து பெரும் சர்ச்சைக்கு மத்தியில் கடந்த 05.05.2023 அன்று இப்படம் வெளியானது. தமிழ்நாட்டில் இப்படம் வெளியான திரையரங்குகள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் இப்படம் முதல் 3 நாட்களில் ரூ.35 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே நேற்று முதல் தமிழ்நாட்டில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், இனி இப்படம் திரையிடப்படாது என்றும் மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்தன. இந்நிலையில் இப்படத்தை மேற்கு வங்கத்தில் திரையிடத் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி. வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களைத் தவிர்க்கவும், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் குறித்து அண்மையில் பேசிய மம்தா பானர்ஜி, "முதலில் காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துடன் வந்தார்கள். இப்போது கேரளா ஸ்டோரியுடன் வருகிறார்கள். பின்னர் வங்காள ஃபைல்ஸ் எடுக்க திட்டமிடுகிறார்கள். கேரளா ஸ்டோரி அவதூறு செய்யும் முயற்சி. திரிபுபடுத்தப்பட்ட உண்மைகள்" எனக் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.