இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்திருந்தார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் கார்த்திகேயா நடித்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். கடந்த மாதம் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றாலும், கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனிடையே வலிமை படம் 'மெட்ரோ' படத்தின் சாயலில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து 'வலிமை' படத்தில் தனது கதை மற்றும் கதாபாத்திரங்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக 'மெட்ரோ' படத்தின் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். மேலும் இப்படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற, 'வலிமை' படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குநர் எச் வினோத் இருவரும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், "செய்தித்தாள்களில் வந்த அன்றாட செய்திகளின் அடிப்படையில்தான் 'வலிமை' படம் எடுக்கப்பட்டது என்றும், 'மெட்ரோ' படத்தின் கதையை வைத்து படம் எடுக்கவில்லை என்றும் இயக்குநர் எச் வினோத் பதிலளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து 'வலிமை' படத்தை ஓடிடியில் வெளியிட தடையில்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.