‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன். அதைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகி இருந்தார். அந்த படத்திற்காக போட்டோ ஷூட் செய்த புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் கடந்த ஜூன் மாதம் பகிர்ந்திருந்தார். அதன் பிறகு இப்படம் குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில் சென்னை விமான நிலையம் வந்த லெஜண்ட் சரவணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “துரை செந்தில்குமார் இயக்கத்தில் நான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடக்க உள்ளது. அதில் கலந்துகொள்ள படக்குழுவினருடன் அங்கு சென்று கொண்டிருக்கிறோம். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ஆண்ட்ரியா, ஷாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பாயல் ராஜ்புத் இப்படத்தில் என்னுடன் ஜோடியாக நடிக்கிறார். தூத்துக்குடியை தொடர்ந்து வெளி மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்தவுள்ளோம். இந்த படத்தை விரைவில் முடித்துவிட்டு அடுத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு கொண்டு வர முழு முயற்சியுடன் செயல்பட்டு வருகிறோம். படத்தின் பெயர் குறித்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் உள்ளது. விரைவில் படத்தின் பெயரை அறிவிப்போம். ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் ஜானரில் இப்படத்தை உருவாக்கி வருகிறோம்” என்றார்.
அதன் பிறகு செய்தியாளர்களில் ஒருவர், “இது போன்ற படங்களில் நடிப்பது அரசியல் வருகைக்கான முன்னோட்டமா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு லெஜண்ட் சரவணன் பதிலளிக்கையில், “மக்கள் நலனில் எனக்கு எப்போதும் அக்கறை அதிகமாக இருக்கிறது. அரசியல் வந்தால் எல்லா தரப்பு மக்களுக்கும் நல்ல விஷயங்களை செயல்படுத்த முடியும். சூழ்நிலை சரியாக அமைந்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்” என்றார். பின்பு விஜய் அரசியல் தொடர்பான கேள்விக்கு அவர், “விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது போன்ற எந்த முடிவும் எடுக்கவில்லை. அவரின் மாநாட்டில் கலந்து கொள்வதை பற்றி சிந்திக்கவும் இல்லை. ஆனால், வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் மும்முனை போட்டியாக தீவிரமாக இருக்கும். இதில் எந்த கட்சி பலமான கூட்டணி அமைக்கிறதோ அந்த கட்சிதான் ஆட்சியமைக்க முடியும். நான் ஒருவேளை அரசியலுக்கு வந்தால் என்னுடைய கொள்கைகளுக்கு உடன்படும் கட்சியுடன் இணைந்து செயல்படுவேன். மக்கள் சந்தோஷமாக வாழ பொருளாதார வலிமை தேவைப்படுகிறது. அந்த பொருளாதார வலிமையை ஏற்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதுதான் என் எண்ணம்” என்று பதிலளித்தார்.
பின்பு முதலமைச்சரின் அமெரிக்கா பயணம் குறித்த கேள்விக்கு அவர், “உள்நாடு முதலீடு மற்றும் வெளிநாடு முதலீடு இருந்தால்தான் பொருளாதாரம் வலிமையாகும். பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பிய முதல்வருக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்றார்.