மன்சூர் அலிகான், சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அவர், லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு த்ரிஷா, “மிகவும் கேவலமான அவமரியாதையான பேச்சு. வன்மையாகக் கண்டிக்கிறேன்” என எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். பின்பு அமைச்சர் ரோஜா, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், சிரஞ்சீவி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அந்த வகையில் நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, இந்த விவகாரத்தை மகளிர் ஆணையத்தின் மூத்த அதிகாரிகளுக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். பின்பு தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு பரிந்துரை செய்தது. அதன்படி மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு போலீசார் இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர். ஆனால், உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் இன்று ஆஜராகவில்லை எனக் குறிப்பிட்டு நாளை ஆஜராக அனுமதி வழங்க காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் முன் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இது ஒரு புறம் இருக்க இந்த விவகாரம் தொடர்பாக குஷ்பு பதிவிட்ட பதிவு தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
எக்ஸ் தளத்தில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஒருவர் குஷ்புவை டேக் செய்து, அப்போது ஏன் மகளிர் ஆணையம் வரவில்லை எனக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த குஷ்பு, “உங்கள் சேரி மொழியில் என்னால் பேச முடியாது” எனக் குறிப்பிட்டு விளக்கமளித்திருந்தார். சேரி மொழி என அவர் பயன்படுத்தியது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியது. இதற்கு பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து எக்ஸ் தளத்தில் விளக்கமளித்துள்ள குஷ்பு, “பிரஞ்சு மொழியில் சேரி என்ற வார்த்தைக்கு அன்பு என்பதே பொருள். அன்பு என்ற அர்த்தத்திலேயே சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தினேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், சேரி மொழி என்று சொல்லி பட்டியலின மக்களை அவமானப்படுத்திவிட்டதாகக் கூறி குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் எஸ்.சி/எஸ்.டி பிரிவு மாநிலத் தலைவர் ரஞ்சன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேரி மொழி என்று பேசி பட்டியலின மக்களை நேரடியாக குஷ்பூ அவமதித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியினருக்கே உரித்தான சாதிய மனோபாவத்தை விஷமாக கக்கியிருக்கிறார் குஷ்பூ. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற எலும்புத் துண்டுக்காக எப்படி வேண்டுமானால் பேசலாம் என்று நினைக்கிறாரா குஷ்பூ. நீட் தேர்வால் அனிதா தற்கொலை செய்து கொண்டபோது இந்த குஷ்பூ எங்கே போயிருந்தார்? பாஜகவின் கே.டி. ராகவன் என்ற தலைவர் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக பேசியபோது இந்த குஷ்பூ எங்கே போயிருந்தார்? பாஜகவில் மகளிர் நிர்வாகிகள் பாலியல் தாக்குதலுக்கு ஆளானபோது இந்த குஷ்பூ எங்கே போயிருந்தார்? மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது இந்த குஷ்பூ எங்கே போயிருந்தார்?
சேரி மக்களிடம் ஓட்டு கேட்கும்போது மட்டும் இனித்ததா? மக்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்த பிறகும் கூட தன் தவறுக்கு மன்னிப்பு கேட்காமல், பூசி மொழுகும் வேலையை செய்ய தொடங்கியிருக்கிறார். சேரி என்ற வார்த்தைக்கு பிரெஞ்ச் மொழியில் அன்பு என்று அர்த்தமாம். அதைத்தான் பயன்படுத்தினாராம். திமுக ஆதரவாளர் ஒருவரின் எக்ஸ் தள பதிவுக்கு பதில் அளித்த குஷ்பு, சேரி மொழி என்று அப்பட்டமாக திட்டினார். அதோடு முதல்வரை சுற்றி இதுபோன்ற முட்டாள்கள் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். இதுதான் அன்பை வெளிப்படுத்தும் சொல்லா? யாரை ஏமாற்ற குஷ்பூ கபட நாடகமாடுகிறார்? இப்போது கூட தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவருக்கு தோன்றவில்லை.
சேரி மொழி என்று சொல்லி பட்டியலின மக்களை அவமானப்படுத்தும் அளவுக்கு குஷ்பூவுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது? குஷ்பூவின் தரக்குறைவான பேச்சால் பட்டியலின மக்கள் மனது புண்பட்டுப் போயிருக்கிறது. தமது தவறை திருத்திக் கொண்டு அந்தப் பதிவை உடனடியாக குஷ்பூ நீக்க வேண்டும். அதோடு அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல், லட்சக்கணக்கான பட்டியலின மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்று எச்சரிக்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.