
மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் ‘எல்2; எம்புரான்’ என்ற தலைப்பில் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. ஆண்டனி பெரும்பாவூர் இப்படத்தை தயாரித்திருக்க முரளி கோபி கதை எழுதியுள்ளார். இப்படத்தில் மஞ்சு வாரியர், பிரித்விராஜ், டோவினோ தாமஸ், ஷிவதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்புக்கு மத்தியில் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 27ஆம் தேதி இப்படம் வெளியானது. ஆனால் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.100 கோடியும் 5 நாட்களில் ரூ.200 கோடியும் வசூலை ஈட்டியுள்ளது.
இப்படத்தில் சில காட்சிகள் 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தை சித்தரிப்பதாக சொல்லி வலதுசாரி ஆதரவாளர்கள் கூறினர். மேலும் வில்லனுக்கு பஜ்ரங் தல் அமைப்பின் தலைவர் பாபு பஜ்ரங்கியின் பெயரை குறிக்கும் வகையில் பல்ராஜ் பஜ்ரங்கி என இருப்பதாக சுட்டிக்காட்டினர். இதனால் சர்ச்சை ஆன நிலையில் இது தொடர்பாக மோகன்லால் படத்தில் வந்துள்ள சில அரசியல் மற்றும் சமூகக் கருத்துகள் என் அன்புக்குரியவர்கள் பலருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாக கூறி வருத்தம் தெரிவித்தார். மேலும் படத்தில் இருந்து சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறியிருந்தார். இதனிடையே கேரள முதல்வர் பின்ராயி விஜயன் படக்குழுவினருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

இந்த நிலையில் இப்படத்தை தடை செய்யக் கோரி கேரள பா.ஜ.க. நிர்வாகி விஜேஷ் கேரள உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “படத்தில் 2002 கோத்ரா கலவரத்தைக் குறிப்பிடும் வகையில் காட்சிகள் உள்ளன. இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தைப் பற்றி தேவையற்ற கருத்துக்களை வெளியிடுகின்றன. மேலும் மத்திய புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் நேர்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதோடு வகுப்புவாத கலவரத்தைத் இந்தப்படம் தூண்டக்கூடும். எனவே, மேலும் சர்ச்சையைத் தடுக்கவும், வகுப்புவாத கலவரங்களைத் தவிர்க்கவும் படத்தின் காட்சியை உடனடியாக நிறுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றம் படத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் பெற்று முறையாக படம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதற்கு ஏன் தடை விதிக்க வேண்டும் என்ற கேள்வியை நீதிமன்றம் எழுப்பியுள்ளது. மேலும் இது விளம்பரத்திற்காக போடப்பட்டுள்ள மனு என மனுதாரரை கண்டித்ததுடன், கோடை விடுமுறைக்குப் பின் வழக்கு விசாரிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது.