கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த 12ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் இந்த பகுதி முஸ்லீம்கள் நிறைந்த பகுதியாக இருப்பதனால் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பாக இதனை சொல்கிறேன் . சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு 'இந்து' மற்றும் அவர் பெயர் நாதுராம் கோட்செ என தெரிவித்தார். இந்நிலையில் கமலின் இந்த பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கமலின் பேச்சுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கஸ்தூரி, “கமல்ஹாசனின் பல சிந்தனைகளுக்கு நான் பெரிய ஆதரவு. ஆனால், கூட்டத்தைத் திருப்திப்படுத்தும் அவரது பேச்சுகளுக்கு நான் ரசிகை இல்லை. பிரித்தாளும் அரசியல் நாடு முழுவதும் இருக்க, இவரது நேர்மறை அரசியல் புத்துணர்வாக இருந்தது. ஆனால், அவரும் பெயர்களை வைத்துப் பேசி அரசியல் செய்யும் நிலைக்கு இறங்கிவிட்டது வருத்தமளிக்கிறது.
மதரீதியாக திருப்திப்படுத்துவதோடு ஏன் நின்றுவிட்டீர்கள்? சாதி அரசியலையும் எடுத்துக்கொண்டு வாருங்கள். இஸ்லாமியர்கள் இருக்கும் பகுதியில் கமல்ஹாசன் இந்து தீவிரவாதம் பற்றி பேசுகிறார். அப்படியே நாதுராம் கோட்சேவை பிராமணத் தீவிரவாதி என்று வண்ணமிட்டு மற்ற குழுக்களின் ஆதரவையும் கோருங்களேன்” என்று தெரிவித்துள்ளார்.