Skip to main content

தி கேரளா ஸ்டோரி பட விவகாரம் - மம்தா பானர்ஜிக்கு நோட்டீஸ்

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

the kashmir files director Vivek Agnihotri sends legal notice to CM Mamata

 

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 5 ஆம் தேதி வெளியான படம் தி கேரளா ஸ்டோரி. இப்படத்தின் டீசர் வெளியான பிறகு மத வெறுப்பைத் தூண்டும் வகையில் படம் இருப்பதாகப் பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனால் இப்படத்தை திரையிடத் தடை விதிக்கக் கோரி பலரும் கூறி வந்தனர். 

 

அந்த வகையில் மேற்கு வங்கத்திலும் எதிர்ப்பு வந்த நிலையில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, 'தி கேரளா ஸ்டோரி' படத்தை திரையிடத் தடை விதிப்பதாக நேற்று அறிவித்தார். வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களைத் தவிர்க்கவும், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் ஒரு பிரிவினரை அவமானப்படுத்தியது. தி கேரளா ஸ்டோரி படம் திரிக்கப்பட்ட ஒரு கதை என்று கூறியிருந்தார். 

 

மம்தா பானர்ஜியின் இந்த பேச்சுக்கு தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மம்தா பானர்ஜிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "எங்களையும் எங்களின் படங்களையும் அவதூறு செய்யும் வகையில் தவறான மற்றும் மிகவும் அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதற்காக இந்த சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்றுள்ளார். 

 

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் தி கேரளா ஸ்டோரி போன்று பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியது. கடந்த ஆண்டு நடந்த 53வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்ட போது, "இப்படம் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. மிகவும் கெளரவமான இதுபோன்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற திரைப்படத்தைப் பார்ப்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த எங்கள் அனைவருக்கும் மன உளைச்சலையும் தந்துள்ளது" என அவ்விருதின் தேர்வுக்குழு தலைவர் நடாவ் லேபிட் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘தி கேரளா ஸ்டோரி’ பட விவகாரம்; முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
The Kerala Story film issue Chief Minister Pinarayi Vijayan strongly condemned

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு மே 5 ஆம் தேதி வெளியான இந்தி படம் தி கேரளா ஸ்டோரி. இப்படத்தின் டீசர் வெளியானது முதலே மத வெறுப்பைத் தூண்டும் வகையில் இப்படம் இருப்பதாக சர்ச்சையானது. தமிழகத்தில் இந்த படத்திற்கு தொடர் எதிர்ப்பு அதிகரிக்க, மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் தானாக முன்வந்து தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிடமாட்டோம் என அறிவித்தன.

அதே சமயம் மேற்கு வங்கத்திலும் இப்படத்திற்குத் தடை விதித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் போலீஸ் பாதுகாப்புடன் தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் இப்படம் வெளியானது. கலவையான விமர்சனமே பெற்றாலும் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்ததாகக் கூறப்பட்டது. இத்தகைய சூழலில் தூர்தர்ஷனில் இன்று (05.04.2024) இரவு 8 மணிக்கு ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

இந்நிலையில், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை ஒளிபரப்புவதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பினராயி விஜயன் தெரிவிக்கையில் “அரசு தொலைக்காட்சிகள் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ் கூட்டணியின் பிரச்சார இயந்திரமாக  ஒரு போதும் மாறக்கூடாது. வெறுப்பை விதைக்கும் இத்தகைய தீங்கிழைக்கும் முயற்சிகளை கேரளா ஒருபோதும் அனுமதிக்காது” எனத் தெரிவித்துள்ளார். தி கேரளா ஸ்டோரி ஒளிப்பரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
West Bengal CM and TMC chairperson Mamata Banerje incident

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டு 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜி தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். நெற்றியில் இருந்து முகத்தின் வழியாக ரத்தம் வழியும் புகைப்படத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், “மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து அவரை உங்களின் பிரார்த்தனை மூலம் நல்ல நிலைக்கு வர வையுங்கள்” எனப் பதிவிடப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையில் உள்ள வூட்பர்ன் பிளாக்கில் இருந்து கொல்கத்தாவில் உள்ள விபத்து மற்றும் அவரச சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

West Bengal CM and TMC chairperson Mamata Banerje incident

மேலும் மம்தா பானர்ஜிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ஆறுதலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தள பதிவில், “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட விபத்து அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது. இந்த கடினமான தருணத்தில் இருந்து மம்தா பானர்ஜி மீண்டு விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.