மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி(நாளை) திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
இதனையொட்டி செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி, “மூன்று வருட உழைப்பிற்கு பலன் கிடைக்கும் தருணம் மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும், பத்திரிகையாளர்கள் நீங்கள் இப்படத்தைப் பற்றி மிக ஆழமாக கேள்விகள் கேட்டு இப்படத்திற்கான மதிப்பை அதிகப்படுத்தியிருக்கிறீர்கள்.
பிற மாநிலங்களில் போனியின் செல்வன், போனியின் செல்வம் என்று கூறியவர்கள், இப்பொழுது போனியின் செல்வன் அல்ல பொன்னியின் செல்வன் கல்கி எழுதியது என்று எல்லோருக்கும் தெரிகிறது. அதுமட்டுமில்லாமல், பத்திரிகையாளர்களான நீங்கள் இதைப் பற்றி நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள். அது இப்படத்திற்கு ஆர்வத்தை அதிகரித்துள்ளது. மேலும், படத்திற்கான ஆர்வத்தோடு நம் நாட்டு கலாச்சாரம், அந்த காலத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்? எப்படி ஆட்சி நடத்தினார்கள்? என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. மற்ற மாநிலம் செல்லும் போது சோழர்களின் வரலாற்றை கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள்.
பொன்னியின் செல்வன் இன்று நிறைய பேர்களிடம் சென்று சேர்ந்துள்ளது. என்னுடைய நண்பர் ஒருவர் ட்ரைன்ல போகும்போது ஒரு போட்டோ எடுத்து அனுப்புனார். அதுல பார்த்தா, ஒரு நாலு பேராவது பொன்னியின் செல்வன் புத்தகத்தை கையில் வைத்திருக்கிறார்கள். ஏன்னா அந்த அளவுக்கு பொன்னியின் செல்வன் படம் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. இன்னும் சில பேர் நாவலை தெரிந்து கொண்டு படத்தை பார்ப்பதற்காக புத்தகத்தை படிக்கிறார்கள். ஆக மொத்தத்தில் மக்கள் மத்தியில் வாசிப்பு அதிகரித்துள்ளது.
ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் அனைவருடனும் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. சோழர்கள் காலத்தில் இருந்த கலாச்சாரத்தை ஆழமாக ஆராய்ச்சி செய்து எழுதியிருந்தார் கல்கி. அதேபோல், மணி சார் காதல், அரசியல் என்ற எந்த மாதிரியான படம் இயக்கினாலும் காட்சியில் உயர்தரம் இருக்கும். இப்படத்திலும் அந்த தரம் நிச்சயம் இருக்கும். கல்கி எழுத்து வடிவில் கொடுத்ததை, மணிரத்னம் காட்சி வடிவில் நமக்கு கொடுத்துள்ளார். உங்களை போலவே நானும் அது எப்படி இருக்கும் என்று பார்க்க ஆவலாக இருக்கிறேன்" எனது தெரிவித்துள்ளார்.