
சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்திருந்த கார்த்தி மற்றும் ரஜிஷா விஜயனோடு புதிதாக மாளவிகா மோகனன், எஸ்.ஜே.சூர்யா, ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். மித்ரன் இயக்கி வரும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ர் லுக் மற்றும் முன்னோட்ட வீடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றுள்ளது. நிகழ்வில் கார்த்தி கலந்து கொண்டு பேசுகையில், “சர்தார் பெயர் வைத்ததிலிருந்தே அந்தப்படத்தின் மீது, எனக்கு நிறைய பிரியம் இருந்தது. நம் கிராமத்தில் அப்பாவியான ஒரு நாடக நடிகனை டிரெய்னிங் தந்து, உளவாளியாக அனுப்பி வைத்தார்கள். இது உண்மையில் நடந்தது. அதை அருமையான கதையாக்கி படமெடுத்தார் மித்ரன். எல்லோரும் முதன் முறையாக ஒரு உளவாளி தனக்காக இல்லாமல், நாட்டுக்காக போராடுகிறான் என இந்தப்படத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இப்போது அந்த பாத்திரம் திரும்ப வருவது மகிழ்ச்சி. மித்ரன் என்றாலே அடுத்து என்ன சொல்லி பயமுறுத்த போகிறார் என கேட்கின்றனர். முதல் படத்தில் செல் போன், அடுத்த படத்தில் வாட்டர் பாட்டில், இப்போது அதை விட பயங்கரமான ஒரு விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார். இந்தப்படத்தில் இன்னும் பெரிய போரை நடத்தவுள்ளார் சர்தார். அதிலும் எஸ் ஜே சூர்யா சாருடன் நடிப்பது மகிழ்ச்சி. மித்ரன் மிகப்பிரம்மாண்டமாக இந்தக்கதையை உருவாக்கியுள்ளார். செட்டில் போய்ப் பார்க்கும் போது அவ்வளவு பிரமிப்பாக இருக்கும், அத்தனை செலவு செய்துள்ளார்கள். லக்ஷ்மன் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் படத்திற்காக எல்லாவற்றையும் செய்ய வேண்டியது தயாரிப்பாளரின் கடமையாக ஆகிவிட்டது. எஸ் ஜே சூர்யா சாருக்கு எவ்வளவு தீனி போட்டாலும் தீரவில்லை இதிலும் அசத்தியுள்ளார். சாம் சி எஸ் கைதிக்கு பிறகு இணைந்துள்ளோம். ரஹ்மான் சார் அடிக்கடி சொல்லுவார், நம்ம கதையாக இருந்தாலும் அதன் உருவாக்கம் சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும், அப்போதுதான் அடுத்த லெவலுக்கு நம்ம போக முடியும். அது போல சாம் சி.எஸ். இதில் நல்ல இசையை கொடுத்துள்ளார். படம் உங்களை கண்டிப்பாக திருப்திப்படுத்தும்” என்றார்.