நடிகர், இயக்குனர் ரமேஷ் கண்ணா, கமல்ஹாசனுடன் தனது அனுபவத்தை பகிர்கிறார்...
"கே.எஸ்.ரவிக்குமார் கூட வேலை செய்தபோது கமல் சார் கூட நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் கூட அறிமுகமாகும்போதே கொஞ்சம் பிரச்சனையாதான் இருந்தது. கே.எஸ்.ரவிக்குமார் கமல் சாரை வச்சு 'அவ்வை சண்முகி' படம் இயக்குவது உறுதியாகிவிட்டது. ஷூட்டிங் போற தேதியெல்லாம் முடிவாகி தயாராகிட்டோம். அமெரிக்காவிலிருந்து மேக்-அப் மேன் வந்துட்டார். ஆனால், கமலுக்கு மேக்-அப்ல திருப்தியில்லை. வேற ஏற்பாடு பண்ணனும்னு சொல்லிட்டார். எங்க டைரக்டருக்கு ஃபுல் டென்சன். அவர் எப்பவுமே சொன்ன தேதியில், சொன்ன பட்ஜெட்டுக்குள் படமெடுத்துக் கொடுக்கிறவர். தயாரிப்பாளர்களின் இயக்குனர்னு அவரை சொல்லுவாங்க.
நாங்க போய் கமல் சாரைப் பாக்குறோம். "இப்போ வேற மேக்-அப் ஏற்பாடு பண்ணனும்னா நீங்க திரும்ப அமெரிக்கா போகணும். மோல்டு எடுக்கணும். இங்கயும் ஷூட்டிங் அதுவரை தள்ளிப்போகும்" என்றெல்லாம் விளக்கி அவரை கன்வின்ஸ் பண்ண முயன்றோம். அவர் கன்வின்ஸ் ஆகல. "அதனால என்ன, படம் நல்லா வரணும்"னு சொல்லி திரும்ப அமெரிக்கா கிளம்பிட்டார். ஒரு மாசம் கழிச்சுத்தான் ஷூட்டிங் ஆரம்பிச்சது. அப்போது எனக்கு ஒரு மாதிரி இருந்தது. இதெல்லாம் கூடுதல் செலவுன்னு தோணுச்சு. ஆனால், படம் தயாரான பின்தான் எனக்குப் புரிஞ்சது, இந்த மேக்-அப் ஏன் தேவையென்று. அவரது பிடிவாதத்தின் விளைவுதான் அந்தப் படத்தின் தரம். அதை பிடிவாதம்னு சொல்லக்கூடாது, உறுதி. அவர் சிரத்தை எடுத்து போகாமல் இருந்திருந்தால், இப்பொழுதும் ஒரு ரெஃபரன்சாக இருக்கும் அளவுக்கு தரமா அது வந்துருக்குமா என்பது சந்தேகம்தான்.. இப்படி, கமல் சார் எப்பொழுதுமே தனக்கு திருப்தி வந்தால்தான் ஒரு செயலை முடிப்பார்.
படம் துவங்குவதுக்கு முன்னாடி இப்படின்னா, ஷூட்டிங் அப்போ இன்னும் கடினமா உழைத்தார். அவருடைய வீடு ஆழ்வார்பேட்டையில் இருக்கு. ஷூட்டிங் நடப்பது மகாபலிபுரம் பக்கத்துல ஒரு பங்களாவுல. அவர் வீட்டுல இருந்து அங்க வர அப்போதெல்லாம் இரண்டரை மணிநேரம் ஆகும். மேக்-அப் போட மூன்றரை மணிநேரம். 5.30 மணிக்கு ஆரம்பிச்சாதான் 9 மணிக்கு ஷூட்டிங் போக முடியும். அப்போ, ஆழ்வார்பேட்டையில் காலைல 2 மணிக்கு எழுந்து தினமும் ஷேவ் பண்ணிட்டு கிளம்பணும். இப்படி, தொடர்ந்து 55 நாட்கள் நடிச்சது எனக்குத் தெரிஞ்சு அவர்தான். வேற யாருகிட்டயும் இந்த அளவு உழைப்பை நான் பார்த்ததில்லை.
9 மணிக்கு ஷூட்டிங் ஆரம்பிச்சு முதலில் க்ளோஸ்-அப் காட்சிகளை எடுப்போம். மேக்-அப் உரிவதற்கு முன்னாடி எடுக்கணும்னு அப்படி செய்வோம். அப்போதெல்லாம் கேரவன் கிடையாது. நாலு மர ஷீட்டை அடிச்சு அதுல விண்டோ ஏசி மாட்டி உள்ள உக்காந்திருப்பார். ஷூட்டிங் முடியும் வரை எதுவும் சாப்பிட முடியாது. ஆனா, அவர் அதுக்கெல்லாம் சளைத்தவரில்ல. சினிமாவுக்கெனவே வாழ்பவர். அவ்வை சண்முகி படத்துல நான் ஒரு சின்ன வேடத்தில் நடித்தேன். கமல் டான்ஸ் மாஸ்டர், நான் டைரக்டரா வருவேன். இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் என் நடிப்பைப் பார்த்துப் பாராட்டுனதாக கிரேசி மோகன் என்கிட்டே சொன்னார். அது ஒரு மகிழ்ச்சி."