நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டெர்நேஷனல் நிறுவனம் மற்றும் ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'கடாரம் கொண்டான். விக்ரம், அக்ஷரா ஹாசன், நாசர் மகன் அபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ளார். ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்கிறார்.
தற்போது இந்த படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. வருகிற ஜூலை 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தற்போது அரசியல் மேடைகளில் பிஸியாக இருக்கும் கமல், பல மாதங்களுக்கு பின் சினிமா மேடை ஒன்றில் பேசியுள்ளார். அப்போது விக்ரம் குறித்து பேசுகையில்,
“இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஒருவர் என்னிடம் ஒரு படம் ஒன்றை போட்டுக்காட்டினார். அப்போது நான் அவரிடம் யாருயா அந்த பையன் என்று கேட்டேன். அவர், ஏன் பிடித்திருக்கா என்றார். ஆமாம், வெரி கான்ஃபிடெண்ட் . ஒரு நாள் செமயாக வருவார் என்று சொன்னேன். அந்த படம் பெயர் மீரா. அப்போது எனக்கு விக்ரமை யார் என்று கூட தெரியாது. ஆனால், கேமராவை பார்த்து நடிக்க ஒரு தைரியம் வேண்டும். அது அவரிடம் நிறையவே இருந்தது. அந்த தைரியம் உள்ளுக்குள் இருந்துதான் வரும்.
அதற்கு பிறகு, இந்த திரையுலகம் யாருக்கு என்ன போடும் என்று சொல்ல முடியாது. ஒருத்தற்கு பொங்கல் போடும், ஒருத்தற்கு பிரியாணி, ஒருத்தற்கு எதுவுமே போடாமல் பட்டிணி போட்டுவிடும். எனக்கு அவர் சியான் விக்ரமாக எற்பட்ட தாமதம் எனக்கு பிடிக்கவே இல்லை. இன்னும் அவர் வேகமாக சியான் விக்ரமாக மாறியிருக்க வேண்டும். சேது இன்னும் பல வருடங்களுக்கு முன்பே வரவில்லை என்கிற வருத்தம் எனக்கு உண்டு. இது கமல்ஹாசன் என்கிற நடிகன் படும் வருத்தம் அல்ல, தயாரிப்பாளர், கலைஞன் படும் வருத்தம். அதன் பின் அவருக்கு நிறைய வெற்றிகள் வந்துவிட்டன. ஊரே அவரை தோளில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. இனி அவரை பற்றி நாம் ஏன் வருத்தப்படனும் என்று இருந்தபோது கடாராம் கொண்டான் படத்தை பார்த்தேன். நான் ஒரு ரசிகனாக அந்த படத்தை ரொம்ப ஜாலியாக என்ஜாய் செய்துகொண்டே பார்த்தேன்.
ஒருபடத்திற்கு எல்லாமே அமையாது. ராஜ்கமலின் கடாரம் கொண்டான் படத்திற்கு அது அமைந்தது சந்தோஷம். இனி சியான் விக்ரமை கே.கே விக்ரம் என்று அழைப்பார்கள். விக்ரம் சொன்னார் இங்கிலிஷ் படம் போல இருக்கும் என்றார். அப்படி சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும்..நிஜமாகவே இது ஆங்கிலப்படம் போலதான்” என்று விக்ரமை பெருமை பாராட்டினார் கமல்ஹாசன்.