திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி. கணேசனின் தந்தையும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஐசரிவேலனின் 35ம் ஆண்டு நினவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் அவரது மார்பளவு சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் ஐசரிவேலனின் சிலையை திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் நடிகர் கவுண்டமணி, இயக்குநர் ஆர்.கே செல்வமணி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய கமல்ஹாசன், "இது உண்மை, மேடை பேச்சு அல்ல. ஒருவருக்கு பொறுப்பு வந்த பிறகு தான்செய்த பழைய வேலை எல்லாம் விட்டுவிட்டு இப்போ பெரிய ஆளாயிட்டான் என்று சொல்வார்கள். ஆனால் வேலன் ஐயா அப்படி இல்லை. பொறுப்பும் பதவியும் வந்த பிறகும் நடிப்பின் மீது உள்ள காதலால் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் எங்ககூட எல்லாம் வந்து நடித்தார். அவர் வந்திருக்க வேண்டிய தேவையில்லை. ஏனென்றால் அவர் எம்ஜி.ஆருடன் சேர்ந்துவிட்டார். இருந்தாலும் நடிப்பில் உள்ள காதலால் நடிக்க வந்தார். அப்படிப்பட்டவர் உடைய சிலை திறப்பில் நானும் பங்கேற்றிருப்பது சந்தோஷமாக இருக்கிறது.
இந்த விழா நடைபெறும் இதே அரங்கில் தான் எம்.ஜி.ஆரின் சங்கே முழங்கு மற்றும் நான் ஏன் பிறந்தேன் படத்திற்கான பாடல்கள் எடுக்கப்பட்டது. அப்போது நான் நடன உதவியாளராக இருந்தேன். இப்பவும் என் மனசுல அப்படித்தான் நான் நெனச்சுக்கிட்டு இருக்கேன். ஆனா நடுவுல எல்லோரும் போஸ்டரெல்லாம் போட்டு பெரிய நடிகன்னு சொல்றாங்க. ஆனால் என்னால நம்ப முடியல. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஐசரி கணேஷ் நீண்ட ஆயுளுடன் நலமாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.